June 7, 2023

புதிதாக கண்டறியப்பட்ட ‘மியு’ என்ற உருமாறிய கொரோனா

கொலம்பியா நாட்டில் புதிதாக கண்டறியப்பட்ட ‘மியு’ என்ற உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கால சூழ்நிலைக்கேற்ப உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல்வேறு வகைகளில் உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்தான் அதிகளவில் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் முதன்முறையாக கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்ட B.1.621 என்ற உருமாறிய கொரோனாவுக்கு, ‘மியு’(Mu) என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். மேலும், உலக சுகாதார அமைப்பு, இதைக் கவனிக்க வேண்டிய கொரோனா வகையாகவும் பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உருமாற்றம் அடைந்த மியு வகை கொரோனா, தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையே எதிர்க்கும் வல்லமை கொண்டது. இதை மேலும் புரிந்துகொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவை.

மியு என்ற உருமாறிய கொரோனா உட்பட மொத்தம் ஐந்து வகைகளைக் கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாக பட்டியலிடப்பட்டுள்ளது. முதலில் கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்ட மியு, தற்போது தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் மியு வகை கொரோனாவால் 0.1% பேரும், கொலம்பியாவில் 39% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ஸ் கோவிட்-19 வகை வைரஸ் அடுத்தடுத்த உருமாற்றம் அடைந்தாலும் அதில் பெரும்பாலும் சிறிய அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தின. ஆனால், சில உருமாற்றங்கள் மட்டுமே அதிவேகமாகப் பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துதல், தடுப்பூசியை எதிர்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் பற்றியதான அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இதன் தன்மை பற்றி தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.