தி.மு.க செய்வது திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்!

தி.மு.க செய்வது திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்!

“தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார். அந்த சங்கத் தமிழ்த் தொகுப்புக்கு “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டப் போவதாகவும் அதில் அறிவித்த நிலையில் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்’ என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத ‘திராவிடம்’ எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.

ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். .

error: Content is protected !!