அறிக்கைகளும், அரசியலும்! ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

அறிக்கைகளும், அரசியலும்! ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

புதிய திமுக அரசின் இரண்டு அறிக்கைகள் குறித்தே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையையும் சேர்த்தால் மூன்று அறிக்கைகள். இந்த மூன்றிலும் காணப்படும் ஒரே நோக்கம் தமிழ் நாட்டை ₹70 இலட்சம் கோடி பொருளாதாரமாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்பதேயாகும். ஆனால் கடன் அச்சுறுத்துகிறது. தமிழ்நாடு தற்போது ₹20-25 இலட்சம் கோடி பொருளாதாரமாகவுள்ளது. அரசின் நிதிநிலை அறிக்கை ₹10-12 இலட்சம் கோடிகளுக்கு நிகராகவுள்ளது. இதில் கடன் ₹7 இலட்சம் கோடி அளவில், 2022 மார்ச் மாதத்தில் இருக்கும் என்பது கணிப்பு.அதாவது மாநில மொத்த தேசிய உற்பத்தியில் 5% அரசின் கடனாகவுள்ளது. இது சமாளிக்கக்கூடியது என்பது பலரது வாதம்.

ஆயினும் கீழே காணும் வகைப்பாட்டின்படி அரசு மூன்று இனங்களுக்கு மட்டுமே தனது வருவாயை செலவழிக்க இயலும். ஒன்று அரசு ஊழியர்களுக்கு, இரண்டாவது கடன், மூன்றாவது மானியஙகள், சமூக நலத்திட்டங்கள்.

இதில் சமூக நலத்திட்டஙகள், மானியஙகளே மிக அதிகமாக 35% செலவுகளாகவுள்ளன. அடுத்தபடி அரசு ஊழியர்களின் சம்பளம், கடன் மற்றும் ஓய்வூதியம். நல்லவேளையாக மூலதன செலவு 13% மாகவுள்ளது. அரசு இதனைக்கொண்டு சொத்து வாங்கலாம், முதலீடுகளைச் செய்யலாம். இது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம். இந்த முதலீடு அரசின் கடனைக் குறைக்கும். இவற்றின் வளர்ச்சி அதிகரித்து வரியில்லாத வருவாயைப் பெருக்கும். இதனால் கடன் அளவுக் குறையும்.

பலகாலமாக பொருளாதார நிபுணர்கள் சொல்லிக்காட்டுவது போல் அரசு தனது மானியஙகளையும், சமூக நலத்திட்டஙகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாருக்கு இத்திட்டங்கள் தேவையோ அவர்களுக்கு மட்டும் வழஙகினால் போதும். இப்போது இத்திட்டங்களால் உயர் வருமானப் பிரிவினரும் பயன் அடைகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் ஓரிரவில் நடைமுறைக்கு வந்த பணமதிப்பிழப்பின் பயனாக வருமான வரிக்கட்டுவோர் அதிகரித்துள்ளனர். இது எதைக்காட்டுகிறது? இத்தனை நாள் இவர்கள் சமூக நலத்திட்டஙகளால் பயன் அடைந்துள்ளனர் என்பதையே. மேலும், பொது விநியோக திட்டத்திலும் பயனாளிகள். இத்தகைய குறைபாடுகளை நீக்கி யாருக்கு உண்மையிலேயே இத்திட்டங்கள் தேவையோ அவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்குத்தான் பொது வழங்கல் அட்டை கொடுக்கப்படுகிறது என்றாலும் சுமார் 2.15 கோடி குடும்பங்கள் இதன் கீழ் வருகின்றனர்.

சமீபத்தில் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகை ₹1000 ஏழைப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார். இதுதான் முறையானது. ஆனால் அரசிடம் துல்லியமானத் தரவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. வருகின்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் செயற்கை நுண்ணறிவு துணைக்கொண்டு துல்லியமாக பொருளாதார நிலையும் சேகரிக்கப்படும் என்பதாலும், கணக்கெடுப்பாளர்கள் டேப் கணினியில் கணக்கெடுப்பது உடனடியாக பதிவேற்றப்படும் என்பதாலும் 99% தரவுகள் துல்லியமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் அரசுக்கு பெரும் செலவு மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

இதில் சுவையான செய்தி என்னவென்றால் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு இந்தமுறை ₹4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ₹6000 கோடி வரையில் ஆகும் செலவு பொது முடக்கத்தால் குறைந்துள்ளதோ? ஆயினும் விவசாயம் மட்டுமே பொது முடக்கத்தால் பாதிக்கப்படவில்லை எனும் போது எப்படி குறையும்? ஆக இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுகிறது என்பது உண்மையா? இது போலவே உணவு மானியமும் உணவகங்களின் ஆதார சுருதியாக உள்ளன எனும் குற்றச்சாட்டும் உண்மையோ?

பேருந்து சேவை உட்பட மானியம் பெறும் பல சேவைகள் இப்படி கடன் அதிகரிக்கவே காரணமாகின்றன என்பதே நிதர்சனம்.

மத்திய அரசிலிருந்து பெறும் 41% வரிப்பங்கீட்டைக் கொண்டே நாம் முன்னேற முடியும். வாக்கு வாங்கி அரசியலைக் கைவிட்டால்…!

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நிலவரி அதிகரிப்பு குறித்து ஏதுமில்லை. பல ஆண்டுகளாக இது உயர்த்தப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியான, நிரந்தரமான வருவாய் இருந்தால்தான் அவை மாநில அரசிடம் பங்கு கேட்காது. சொத்து வரி, குடி நீர்க்கட்டணங்களை உயர்த்தும் எண்ணமில்லை என்று அரசு கூறினாலும் உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு நடக்கலாம்.

சமூக நலத் திட்டங்களைக் குறைக்க வேண்டுமென்றால் மக்களே சொந்த வருமானத்தில் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதற்கு கூலி, சம்பளம் ஆகியவற்றை விலைவாசி அடிப்படையில் ஆண்டு தோறும் மாற்றியமைக்க வேண்டும். குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தைத் திருத்தி செம்மையாக்கி கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாடகை, குத்தகை போன்றவை கருவூலங்கள் மூலமாக உரிமையாளர்களுக்கு வழங்கும்படி முறைமை செய்ய வேண்டும். அரசு இதற்கு சேவைக்கட்டணம் விதித்தால் கணிசமான வருமானம் கிடைப்பதோடு குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தலாம்; வருமான வரியையும் அதிகரிக்கலாம். இதன் மூலமும் மாநில அரசிற்கு வருமானம் பெருகும்.

எப்படிப் பார்த்தாலும் அரசு தனது குடிமக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுப்பது கடமை. இதற்கு அரசின் வருவாய் பெருகி, செலவுக்குறைந்து கடனும் குறைய வேண்டும். அதுவே நிரந்தர விடியல்!

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!