கலைஞர் கருணாநிதி படத்திறப்பு ; ஜனாதிபதி & முதல்வர் பேச்சு முழு விபரம் + வீடியோ

கலைஞர் கருணாநிதி படத்திறப்பு ; ஜனாதிபதி & முதல்வர் பேச்சு முழு விபரம் + வீடியோ

ட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ் நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் கருணாநிதி’ என்றும்  ‘தேவதாசி முறை ஒழிப்பு , சத்துணவு திட்டம் போன்ற முக்கிய மக்கள் நல திட்டங்களை நாட்டுக்கு தந்தவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் வரவேற்றனர். நூற்றாண்டு விழா நிகழ்வின் தொடக்கத்தில் ‘EARLY WRITING SYSTEM’ என்ற புத்தகத்தை, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சருக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ராஜேந்திர சோழன் புத்தகத்தை பரிசளித்தார் சபாநாயகர் அப்பாவு.

நிகழ்வில் வரவேற்புரையாற்றிய சபாநாயகர், வழக்கறிஞராக இருந்தபோது ஏழை மக்களுக்காக போராடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைப்பது சிறப்பு வாய்ந்தது என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நாள் இது. தமிழக, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு குடியரசுத் தலைவர் வருகை தந்திருக்கிறார். அவர் பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும் அதனை ஏற்காமல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சமூக நீதியைத் தன் வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இத்தனை பெருமைக்குரிய அவர், நம் தமிழக சட்டப்பேரவைக்கு வந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

தமிழக சட்டப்பேரவை பல முன்னோடி சட்டங்களை இயற்றி, சமதர்ம சமூகத்தை உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. 1919-ம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அந்நாளைய மாகாண சட்டப்பேரவைகளில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைந்திட வழிவகுத்தது.

அச்சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920-ம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. 1921-ம் ஆண்டு கனாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி, சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்ச்சியும், 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியும், 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழக அரசால், சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதலாக மகளிருக்கு வாக்குரிமை அளித்த பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு உண்டு. தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு, பெண் குழந்தைகளைக் காக்க சிறப்பு திட்டம் என, பெண்களுக்காக நாட்டுக்கே முன்னோடி திட்டங்களை உருவாக்கிய பெருமைகொண்டது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர்சூட்டிய தீர்மானம், சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது, நில சீர்திருத்த சட்டம், மே 1 அரசு விடுமுறை, மாநில சுயாட்சிக்கான தீர்மானம், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் இயற்றியது, தகவல் அறியும் உரிமை சட்டம் என, பார் போற்றும் சட்டங்கள் இங்கு இயற்றப்பட்டன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நிறுவப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என தமிழ் மொழி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், ஏழை, எளியவர்கள், என, விளிம்புநிலை மக்களின் நலன் காக்க இந்தச் சட்டப்பேரவை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தச் சட்டப்பேரவையில் செயலாற்றிய கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. 1957-ல், தனது கன்னிப் பேச்சில் விவசாயிகள் பிரச்சினையைப் பேசி கவனம் ஈர்த்தவர் கருணாநிதி. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெற்றவர். சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவர். மண்டல் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்த தீர்மானம் கொண்டு வந்தவர். காவிரி நடுவர் மன்றத் தீர்மானம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், நுழைவுத்தேர்வுகளை ஒழிக்கக்கூடிய சட்டம் எனப் பல்வேறு புரட்சிகர சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.

அவருடைய திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் தொடங்கி, க.அன்பழகன் வரையிலான மாபெரும் தலைவர்களின் முகங்களைக் காண்கிறேன். இன்னும் முன்னால் இருந்து நம்மை வழிநடத்தும் தலைவராக அவரைப் பார்க்கிறேன். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்திருப்பதை எண்ணி, தமிழக முதல்வராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்”. என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் இந்திய முதல் குடிமகன். அவர் திறந்து வைத்த உருவப்படத்தில் யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்று அமைந்துள்ளது. அதற்கு கீழே காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது..

இதை அடுத்து பேசிய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ” அனைவருக்கும் வணக்கம். இந்திய அரசியல் தலைவர்களில் மிகச்சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ புகைப்படத்தை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், ” என்று தமிழில் முதலில் பேசினார்.

தொடர்ந்து பேசிய ஜனாதிபதி, “தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனநாயக அடிப்படையில் நிர்வாகத்தை உறுதி செய்வதில் தமிழக சட்டப்பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனது புரட்சிகரமான திட்டங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி.

தீண்டாமையை ஒழிக்க சமத்துவபுரங்களை அமைத்த தலைவர். உலகில் மூத்த மற்றும் சிறப்பான மொழி தமிழ். தமிழ் மொழியில் நான் பேசுவதில் பெருமை கொள்கிறேன். மந்திரம் கற்போம்., வினை தந்திரம் கற்போம்., வானை அளப்போம் என்ற பாரதியாரின் பாடலையும் மேற்கோள் காண்பித்து பேசினார்.

பதின்ம வயதில் அரசியல் களம்கண்டு தனது வாழ்க்கையை தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் கழித்தவர். ஆறுகளில் கிளைகள் உள்ளதை போல பலரும் நாட்டிற்காக உழைத்தனர். சட்டப்பேரவையில் திருவள்ளூர், மகாத்மா காந்தி, சி. ராஜகோபாலசாரி, சி.என். அண்ணாதுரை, காமராஜர், ஈ.வே ராமசாமி, அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர், முகமது இஸ்மாயில், எம்.ஜி. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி, பி.ஓ. சிதம்பரம் பிள்ளை, பி. சுப்பிரமணியன், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆகியோரின் வரிசையில் இன்று கருணாநீதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தேசத்திற்காக உழைத்தவர்கள், மக்களுக்காக உழைத்தவர்கள் ” என்று பேசினார்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!