தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி !- கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட்!

தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி !- கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட்!

16 வயதில் பத்திரிகையாளர், 20 வயதுகளில் வெற்றிகரமான வசனகர்த்தா, 32 வயதில் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் சென்றவர், 13 முறை தொடர்ச்சியாக வென்று 95 வயதிலும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்பவர், 38வயதில் திமுக பொருளாளர், 49 ஆண்டுகளாக திமுக தலைவர், ஐந்து முறை தமிழக முதலமைச்சர் என பரிணாமம் கண்ட கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது கற்றுக் கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். சட்டமன்றத்தில் முதல் முதலாக கருணாநிதி உட்கார்ந்திருந்த இருக்கை எண் 170.அதாவது குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தது திமுக. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராசர் தமிழக முதல்வரானார்.

கடந்த 1957-இல் வெற்றி பெற்றபோது குளித்தலைத் தொகுதியில் உள்ள நங்கவரம் பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் கருணாநிதி பேசிய முதல் பேச்சாகும். பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் சட்டசபையில் முதல்நாள் அனுபவம் இருந்ததாம்.

தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து தான் மறையும் வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடித்தார். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 1957-ம் ஆண்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகக் குளித்தலை தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஏ.தர்மலிங்கத்தை 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தனது முதல் சட்டசபை உரைக்கு கருணாநிதி ஒத்திகைபார்த்துவிட்டுப் போய் சட்டமன்றத்தில் பேசினாராம். செய்யும் விஷயத்தைத் தெளிவாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும் என்பதைத் தன் முதல் உரையிலிருந்து செய்யத் தொடங்கியவர் கருணாநிதி. ஆரம்பத்திலிருந்தே பேச்சில் வல்லவர்… கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது, கற்பனைத் திறன், சாதுர்யமாக எதிரியின் பேச்சுக்குப் பதிலளிப்பது, பேச்சில் உள்ள நக்கல், நையாண்டி எனக் கருணாநிதிக்கு எல்லாமே ப்ளஸ்.

*டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் பின்னாளில் மு.க!.

‘ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல்.

தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.

தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.

அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்று போனது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.

கலைஞர் கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.

ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.

தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.

ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்… கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை….கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!. ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போதைய பிரதமர் மோடி வரை 14 பிரதமர்களோடும் அவர் அரசியல் நடத்தினார். முன்பு ஒருங்கிணைந்து இருந்த தஞ்சை மாவட்டத்தில், திருக்குவளை என்ற குக் கிராமத்தில் 1924, ஜூன் மாதம் 3ஆம் தேதி யில் பிறந்த கருணாநிதி, சிறு வயதிலேயே பட்டுக்கோட்டை அழகிரி என்பவரின் மேடைப் பேச்சைக் கேட்டு, பகுத்தறிவுச் சிந்தனைக்கு வசமாகி, ஈவெரா பெரியாரைத் தலைவராக ஏற்று, சி. என். அண்ணாதுரையை வழிகாட்டி யாக ஆக்கிக்கொண்டு, அவரின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானார்.

சட்டசபையில் கருணாநிதி அதிக நேரம் பேசிய நாள்கள் பல உண்டு. இருப்பினும் 1997-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அவர் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது, ஆட்சிக்கு வந்த எழு ஆண்டுகளில் ஒருமுறைகூட பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் இருக்கும் நாட்டில், முதலமைச்சர் என்ற கோதாவில் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமில்லாமல் பதிவி இல்லாத பல்வேறு சமயங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தவர், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பத்திரிகையாளர்களுடன் உரையாடத் தயங்காதவர் கருணாநிதி. இவரிடம் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்பது தனித் தகவல் . அப்படி பத்திரிகையாளர்களுடனான அவருடைய நெருக்கத்திற்கான காரணம், சமயங்களில் அவரே சொல்வதுபோல, “நானும் பத்திரிகைக்காரன்” என்பது குறித்து கட்டிங் கண்ணையா பேரில் பிறிதொரு ரிப்போர்ட் வரக் கூடும்

அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தீர்மானம், மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரிக்கை, சுதந்திர நாளன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்று வதற்கான உரிமை, இந்தியாவில் கூட்டணி ஆட்சி, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய அரசியல் சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி உலக மாநாடுகள், வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம், 133 அடி வள்ளுவர் சிலை, எல்லா வற்றையும் சாதித்து அழகு பார்த்தவர். சமூக நிதியுடன் பின்னிப்பிணைந்த மாநில வளர்ச்சிக்கு அடிகோலிய கருணாநிதி, உழவர் சந்தை, குக்கிராமங்களுக்கு குட்டி பேருந்துகளைக் கண்டார்.

நாட்டுக்கே முன்னோடியாக ‘டைடல்’ பார்க் பேட்டைகள், சமத்துவபுரங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம், இட ஒதுக்கீடு, குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சரிசம உரிமை, திருமண உதவித் திட்டம், அரசு வேலைகளில் 33 விழுக்காடு பெண்களுக்கு, கை ரிக்‌ஷாக்குப் பதில் சைக்கிள் ரிக்‌ஷா, பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் மறுவாழ்வு முதலான திட்டங்களுக்கு முன்னோடி.

 

அதே சமயம் கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான். கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்திவந்தது தமிழ் சினிமா. இந்த ட்ரெண்டை மாற்றி, “மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை, நல்ல சமூகக் கருத்துகள்தான்” என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில், சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. கருணாநிதியின் `பராசக்தி’, `மந்திரிகுமாரி’ பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதைச் சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. அரசியலில் நொடித்துப்போனால், நான் சினிமாவையும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

இப்படி எக்ஸ்ட்ரா முகம் கொண்ட கலைஞர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது. 80-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய், 2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். இவருக்காகக் காத்திருக்காத டெல்லி வாலாக்களே இல்லை. தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி… இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கு எப்போதும் இடமுண்டு.

இப்படி *ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்திய தமிழக அரசியல் நிஜ சாணக்கியனின் ஆசை நிறைவேறிய நிலையில் அவரது உருவப் படம் சட்டமன்றத்தில் இந்திய குடிமகனால் திறந்து வைக்கப்படுவது மிகச் சரியான செயல்தான் என்பதை மனித ஜன்மங்கள் மட்டுமே ஏற்று கொள்வார்கள் என்பது மிகையில்லைதானே!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!