பெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு!
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்பி எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் உள்ள அமைச்சர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் ஆகிய 142 பேர்களுடைய மொபைல்கள் மூலமாக அவர்களது நடவடிக்கைகளை உளவு பார்க்க இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்ட பேகசுஸ் என்ற உளவு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் புகார் குறித்து சுயேச்சையான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது இப்பொழுது நீதிபதியாக இருக்கிற ஒருவரோ மேற்கொள்ள வேண்டும். அதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கைகளை இராணுவ தரம் வாய்ந்த உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி கண்காணிப்பது பல அடிப்படை உரிமைகளை மறுப்பதாக அமையும். அத்துடன் பல நிறுவனங்களில் ஊடுருவி அந்த நிறுவனங்களைத் தாக்கி நிலை குலையச் செய்வது நமது ஜனநாயக அமைப்பின் அடிப்படையான தூண்களை தகர்ப்பதாக அமையும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை குறித்து அரசாங்கம் தன்நிலையை முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும் .பெரும் எண்ணிக்கையில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரை உளவு பார்ப்பதற்காக உளவு சாப்ட்வேர் ஒன்றுக்கு அரசாங்கம் அனுமதி தந்திருந்தால் அது பேச்சுரிமையை மறுப்பதாக அமையும். அத்துடன் கருத்து வித்தியாசத்தையும் ஒடுக்குவதாக அமையும்.
இந்த பிரச்சனை எழுந்து பல நாட்கள் ஆகிவிட்ட போதிலும் அரசாங்கம் தன்னுடைய நிலை என்ன என்று தெளிவாக இதுவரை கூறவில்லை. சட்டவிரோதமாக மொபைல்களில் ஊடுருவ அரசு அனுமதி வழங்கியதா, இல்லையா என்று அரசாங்கம் நேரடியான பதில் தெரிவிக்கவில்லை. மேலும் சுயேச்சையான நம்பிக்கைக்கு உரிய விசாரணை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது என்பதைக்கூட கூறத் தயாராக இல்லை. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், தனிப்பட்ட உரிமைகளை உளவு பார்க்கும் நடவடிக்கை பெரும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.
சொல்லப்போனால் டெலிகிராப் சட்டம் பிரிவு 5(2)படி உளவு பார்ப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் முழுமையாக புறக்கணித்து இருப்பதாக தோன்றுகிறது. பொதுமக்களை இலக்காக வைத்து உளவு பார்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது நெருக்கடி நிலை காலத்தில் தான் கண்காணிப்பு தகவல்களை குறுக்கிட்டு அறிதல் சாத்தியமாகும் .அதுவும் பொதுநலன் கருதி அதற்கான நிலைமைகள் நிலவும் பட்சத்தில் கண்காணிப்பு மற்றும் செய்திகளை இடையீட்டு அறிய அனுமதிக்கப்படுகிறது. அதுவும் அரசாங்கம் தன்னிச்சையாக இத்தகைய அனுமதிகளை வழங்க இயலாது இந்த சட்டபூர்வமான சூழ்நிலையில் பேகசுஸ் உளவு சாப்ட்வேர் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவினர். அவருடைய நடவடிக்கைகள் குறித்து கண்காணித்தல், உளவு பார்த்தல் ஆகியவை கடுமையான கிரிமினல் குற்றமாக அமைகிறது.
ஒரு மொபைல் போனில் உரிமையாளருக்கு தெரியாமல் அவரது மொபைலில் ஊடுருவி அவருடைய மற்றும் அவர் தொடர்பு கொள்கிற மற்றவர்களைப் பற்றிய தகவல்களை கண்காணிக்க ரகசிய உளவு மென்சாதனம் வாய்ப்பு உருவாக்கித் தருகிறது .இதன்மூலம் படங்கள், அறிக்கைகள், செய்திகள், பேச்சுக்கள் ஆகிய அனைத்தையும் உரிமையாளருக்கு தெரியாமல் பிரதி செய்து மூன்றாவது நபருக்கு அனுப்ப இயலும். ஒரு மொபைல் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வதற்காக அழைப்பு மூலமாகவே ரகசிய உளவு சாஃப்ட்வேரை அந்த மொபைலில் இறக்குமதி செய்துவிட முடியும்
அரசாங்கங்களுக்கு மட்டுமே பேகசுஸ் சாஃப்ட்வேர் விற்கப்படுகிறது என்று அந்த சாஃப்ட்வேரை உருவாக்கிய என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனம் கூறுகிறது. இந்த பேகசுஸ் உளவு சாப்ட்வேர் ஊடுருவிய மொபைல்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த மொபைல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உறுதி செய்துள்ளது.சமூகத்தில் அனைத்து பிரிவினருடைய அடிப்படை உரிமைகளை சீர்குலைய செய்கின்ற இந்த உளவு நடவடிக்கை குறித்து சுயேச்சையான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் வகை செய்யவேண்டும். விசாரணையை சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி அல்லது தற்பொழுது பதவியில் உள்ள நீதிபதியும் நடத்தலாம் என பத்திரிகையாளர்கள் என். ராம் மற்றும் சசிகுமார் தாக்கல்செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளதாக்கும்.