இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா?
52-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரையிடுவதற்கான இந்திய படங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் முக்கிய அம்சமான இந்தியன் பனோரமா என்ற பிரிவில் இந்தியாவின் சிறந்த சமகால திரைப்படங்கள் திரையிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன.
வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் அடுத்த பதிப்பில் திரைப்படங்களை விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 18-ஆம் தேதி வெளியானது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 12. இவ்வாறு சமர்ப்பிக்கப் பட்டதற்கான அச்சுப்பிரதி மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். 2021 இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்கான திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கு ஒரு சில வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழைப் பெற்ற தேதி அல்லது சமர்ப்பிக்கப் பட்ட திரைப்படத்தின் தயாரிப்பு நிறைவடைந்த தேதி, ஆகஸ்ட் 1, 2020 முதல் ஜூலை 31, 2021-க்குள் இருக்க வேண்டும். எனினும், இந்த சான்றிதழ் அல்லது வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் தயாரிக்கப்படாத திரைப்படங்களும் அனுப்பப்படலாம். அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் வசன வரிகள் இடம்பெற வேண்டும்.