ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 5 லட்ச ரூபாய்!

ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 5 லட்ச ரூபாய்!

டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் தடகள பிரிவுக்கான போட்டிகள் ஜுலை 31ம் தேதி தொடங்குகின்றன. இந்தநிலையில் இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில், 5 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவகள். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள 5 தடகள வீரர்களுக்கும் தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குகொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும் ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கிவருகிறது.

அந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் 23-7-2021 முதல் 8-08-2021 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா 5 லட்ச ரூபாய் வீதம் 25 லட்ச ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதில், எஸ்.ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழக்கும் திட்டம், சுபா. வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள்.

ஏற்கெனவே ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்குத் தலா 5 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்ச ரூபாய் அரசின் சிறப்பு ஊக்கத் தொகையினைக் கடந்த 26-6-2021 அன்றும், மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பவானி தேவிக்கு 5 லட்ச ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையினை 20-6-2021 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!