தூற்றப்படுவது இந்தியாவா? அல்லது மோடி அரசா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தூற்றப்படுவது இந்தியாவா? அல்லது மோடி அரசா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மெரிக்காவின் முன்னணி நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் தனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. வேலை வாய்ப்பு விளம்பரம் அதன் வணிகப்பிரிவில் பணியிடம் ஒன்றிற்கு என்றாலும், அதில் மோடி அரசை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பலருக்கு விளங்காதது.

அந்த விளம்பரத்தின் வாசகங்களில் சில…..

இந்தியாவின் வளர்ச்சி தற்போதைய பிரதமர் மோடியினால் சாலையின் நடுவே கடக்க இயலாமல் நிற்கிறது. மோடி இந்தியாவை தற்சார்புடையதாக, அதன் ஹிந்துப் பெரும்பான்மையினரை மையமாகக் கொண்ட புஜபலம் மிக்க தேசியவாதத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறார். இந்தியாவின் நவீன சிற்பிகளின் நோக்கத்திற்கு எதிரானது இது. மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கும்போது ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்து வந்தப் பொருளாதாரம் இப்போது மந்தநிலையை அடைந்துள்ளது.

இந்தியாவும், சீனாவும் எல்லையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்தியா, சீனாவிடம் இருந்து ஆசியாவின் முன்னணிப் பொருளாதாரம் எனும் பெருமையை பறிக்க நினைக்கிறது.

இந்தியா உள் நாட்டில் எப்போதும் கொதிநிலையில் மக்களை கொண்டிருக்கும் நாடு. இப்போது அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் அமேசான் போன்ற தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு புதிய சட்டங்கள் மூலம் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குகிறது. இங்கு தொழில்நுட்பம் என்பது வசதி ஒருபுறமாகவும், தொந்திரவு ஒருபுறமுமாகவுமுள்ளது.

இப்படி அந்த நாளிதழ் சொல்ல வேண்டியக் கட்டாயம் என்ன?

பொதுவாக அமெரிக்க ஊடகங்களுக்கு அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் மற்ற நாடுகளை விட அதிகம்தான். ஆனால், அது பல நேரங்களில் எதிர்மறையாகி பல சர்ச்சைகளுக்கு காரணமாகி விடுகின்றன. அங்கும் கருத்து சுதந்திரத்திற்கும், தனி நபர் உரிமைகளுக்கும் இடையிலான இடைவெளி சிக்கலானது. நீதிமன்றங்கள் வரைப் போகும் வழக்குகள் உண்டு. அதே சமயம், அதிபர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்களை எப்போதும் வேவு பார்க்கும் பழக்கமும் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல மேலை நாடுகளில் பலவற்றிலும் உண்டு. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மரணத்திற்கும் இப்படியொரு தனி நபர் உரிமை மீறல் நிகழ்வே காரணம். இந்தியாவில் இன்றும் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு முன்னுரிமை உண்டு.

அதே சமயம் இதழியல் அறம் என்பதைக் கடந்து பல ஊடகங்கள் செயல்படுவது அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி எந்த மேலை நாட்டு ஊடகங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மோடி அரசின் நடவடிக்கைகளை இருட்டடிப்பு செய்வதில் முன்னணியில் இருப்பதிலேயே போட்டி நிலவுகிறது. கடந்த ஏழாண்டுகளாக அரசின் செயல்பாட்டில் காணப்படும் மாற்றங்களை, அதன் தாக்கங்களை ஒருபக்கச் சார்பாக மட்டுமே ஊடகங்கள் பதிவு செய்கின்றன. எ.கா. ஜி எஸ் டி குறித்தும் அதன் சாதகங்கள் குறித்தும் எழுதுவதைக் காட்டிலும் அதற்கு எதிரான மனநிலையை வளர்க்கவே ஊடகங்கள் விரும்புகின்றன. பல நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்று சேரவேயில்லை. குறிப்பாக மோடி கொண்டு வந்த இரண்டு காப்பீடு திட்டங்கள் குறித்து ஊடகங்கள் ஏதும் சொல்லாததால் கொரோனா நோய்க்காலத்தில் இறந்தவர்கள் காப்பீடு பயனை அடைய முடியவில்லை. அதேபோல இரசாயன உரங்களைப் பயன்படுத்தி தரிசான நிலங்கள் மீண்டும் இயற்கை வேளாண்மைக்கு ஏற்றதாக மாற்றும் திட்டத்தின் கீழ் வருடம் ரூ.50,000/- வழங்கப்படுகிறது. இது குறித்தும் யாரும் பேசுவதில்லை. எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதிலுள்ள வேளாண் உப வரி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு நிதியுதவி ரூ. 6,000/- வழங்கப்படுகிறது என்பதை சொல்வதேயில்லை. அதே போல மாநில அரசுகளின் வரியும் எரிபொருள் விலைக்குக் காரணம் என்பதையும் சொல்வதில்லை.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அமெரிக்காவின் வணிக நலன்களுக்கு மட்டுமே மோடி அரசு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பும் மனோபாவம் மட்டும் விளம்பரத்தில் வெளிப்படுகிறது. டிவிட்டர் நிறுவனம் தன்னை அமெரிக்க நிறுவனம் எனவே இந்திய நீதிமன்றங்கள் தங்களை விசாரிக்க முடியாது என்று வாதிடுகிறது. இந்திய அரசின் கீழ் அனுமதி பெறாமல் தன்னால் வணிகம் செய்ய முடியும் என்பதே இதன் சாராம்சம். அதாவது இந்திய அரசு வெறும் டம்மி என்றே பொருள். தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சீண்டுவதையே வேலையாக டிவிட்டர் செய்து வருகிறது.

இது போன்று இந்திய அரசை இகழும் பல விஷயங்கள் நடந்துள்ளன. ராஜீவ் காலத்தில் மார்க் டுல்லி எனும் பி பி சி இந்தியாவின் ஆசிரியர் தயாரித்த ‘ராஜீவ்ஸ் இந்தியா’ எனும் தொலைத் தொடர் தடை செய்யப்பட்டது. அதில் இந்திராவின் படுகொலைக்குப் பிறகு சீக்கியர் மீதான தாக்குதல் குறித்தும் பல விமர்சனங்கள் அடங்கியிருந்ததே காரணமாக சொல்லப்பட்டது. பின்னர் வாஜ்பாயி காலத்தில் அணு வெடிப்பு சோதனை சமயத்தில் இந்திய எதிர்ப்பு என்பது வழக்கமானதாக இருந்தது. மொத்தமாக கூற வேண்டுமென்றால் எப்போதும் இந்தியா தொழில்நுட்பத்திற்கோ அல்லது அயல்நாட்டு விஷயங்களுக்கோ மேலை நாடுகளை அண்டி நிற்க வேண்டும்; தனியானதொரு பாதை கூடாது எனும் காலனிய மனப்பாங்கோடு அமெரிக்க வல்லாதிக்க நலம் விரும்பிகள், ஐரோப்பிய முன்னாள் காலனிய நாடுகள் நினைக்கின்றனர். குறிப்பாக ஐநாவில் இந்தியாவும், ஜப்பானும் முன்னணிக்கு வந்து விடக்கூடாது என்ற நினைப்பிலேயே ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்கள் ஆசையை ஒத்திப்போட்டு வருகிறார்கள்.

இப்படியான சூழலில் மோடியும் அவரது தாய்வழி இயக்கமான ஆர் எஸ் எஸ்சும் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் ஆக்கும் முயற்சியில் அதிகம் முனைப்பு இப்போதும் காட்டவில்லை. பொருளாதார ரீதியாக இந்தியாவை இன்னும் வளர்க்க வேண்டும்; அதைக் கொண்டே தங்களது கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் போல! காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் தலையீடுதான் இம்சையே தவிர காஷ்மீர் தலைவர்கள் அல்ல என்பது சமீபத்திய மத்திய அரசுடனான சந்திப்புகள் சுட்டுகின்றன. இதே அளவில் திபெத்தை தனி நாடாக ஆக்கும் முயற்சிக்கு அமெரிக்கா உட்பட பழைய காலனிய நாடுகள் ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிற்கு சீனா ஏதோ ஒரு வகையில், குறிப்பாக அதன் மலிவு உற்பத்தி முறை சாதகமாக இருக்கிறது. வேறொரு நாட்டை இப்படியொரு மலிவு உழைப்பு பொருளாதாரமாக மாற்றி விட்டால் அப்போது சீனாவைக் கழற்றி விடலாம். அது வரை இவர்களின் நாடகம் தொடரும். அத்தகைய நாடகத்தின் ஒரு அங்கம் தான் நாளேடுகள் என்றால் மிகையில்லையே?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!