தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் அமல்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் அமல்!

மிழ்நாட்டு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-லிருந்து இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். மேலும், அரிய வகை சிகிச்சை, அறுவை சிகிச்சை வேண்டுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சமும், மற்ற சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ 7.5 லட்சமும் செலவழித்து கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டமானது, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 2021 ஜூலை 1–ந்தேதி (இன்று) முதல் 2025 ஜூன் 30–ந்தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2016-ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மற்றும் தகுதியுள்ள அவரது குடும்பத்தினர் சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சையையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Posts