எங்கே கருணை? எங்கே நிதி? அரசின் சிக்கலுக்கானத் தீர்வு என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

எங்கே கருணை? எங்கே நிதி? அரசின் சிக்கலுக்கானத் தீர்வு என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

மீபத்தில் நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பேசும் போது மாநிலங்கள் அன்றி ஒன்றியம் இல்லை; எனவே வேண்டா வெறுப்புடன் நிதிப்பகிர்வை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று பேசியுள்ளார். இந்தியாவில் மொழி வாரி மாகாணங்கள் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிந்த யாவரும் ஒன்றியத்திலிருந்துதான் மாநிலங்கள் உருவானதை ஒப்புக்கொள்வார்கள். இது ஒரு புறம். ஆனால் நிதி விஷயத்தில் அதுவும் ஜி எஸ் டியின் வடிவமைப்பே தவறு என்றும் பெரிய மாநிலங்களுக்கு, அதாவது அதிக வருவாய்க் கொண்ட மாநிலங்களுக்கு கூடுதல் முன்னுரிமைத் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. மாநில அரசின் கடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5.5 இலட்சம் கோடியாக இருக்கும் என்று இடை க்கால நிதி நிலை அறிக்கையில் முன்னாள் அரசு கூறியிருந்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாநில அரசின் கடனையும் அடைத்து பெரும் பாய்ச்சலில் வளர்ச்சியை தனது சொந்த முயற்சியால் ஏற்படுத்தப்போவதாக கூறியது. அதற்கேற்றபடி 7 அம்ச அறிக்கையெல்லாம் வெளியிடப்பட்டது. ஆகையால் அரசின் முன்னுள்ள சவால்களில் முன்னே நிற்பது சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வது எனும் அம்சமாகும். எப்படி அது நிகழும்? அப்படி நிகழ்வதற்கு ஏற்கனவே சில வாய்ப்புகளை திமுக சொல்லிவிட்டது. ஆனாலும் சொல்லாமல் விட்டதும் உள்ளன. அவை பல காலமாக பலரும் அவ்வப்போது சொல்லி வந்தவையே. முந்தைய அதிமுக அரசு ஓரளவு அவற்றைச் செய்ய முனைந்தது அல்லது கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. இனி அவை என்ன? எப்படி நன்மைத் தரும் என்பதைக் காண்போம்.

தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி பழங்கள், காய்கறிகளின் விளைச்சலுக்கு குறைவில்லை. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் அனைத்தும் உண்ணப்படுவதும் இல்லை. சுமார் 40% காய்கறிகள், பழங்கள் வீணாவதாக இந்திய விவசாய ஆய்வு நிறுவன இயக்குநர் ஏ கே சிங் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதே போல 10% தானியங்களும் வீணாவதாக அவர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் சுமார் 2-3% பழங்கள் மட்டுமே மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றப்படுகின்றன. நுகர்வு அளவு 40% என்றால் மொத்தம் 43% மட்டுமே பயன்படுகின்றன, மீதம்? வீணாகின்றன. இதைத் தவிர்க்க பழங்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கிறார்கள். பல புதிய ஆலைகளை அமைத்து பழரசங்கள் தயாரிக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் தக்காளி பழரசம் தயாரிக்க நடமாடும் வண்டிகளைக் கூட துவக்கினார்கள். இப்போது இயங்குகின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் இதே பழங்களையும், ஓரளவு காய்கறிகளையும் வைத்து தரமான மதுபானங்களைத் தயாரிக்கலாம். இப்போது விற்கப்படும் மதுபானங்களில் பேரளவு வேதியியல் கூறுகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு பெருந்தீங்காகவுள்ளன. குடியாலும், குடிபோதையில் வாகன விபத்து ஏற்படுவதாலும் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. எனவே வீணாகும் பழங்களைக் கொண்டு தயாரிக்கும் மதுபானங்கள் போதையைத்தரும் அதே சமயம் உயிருக்கு கெடுதல் இல்லை. மேலும் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு சுமார் ரூ. 2,000 கோடிக்கு மதுபானங்கள் ஏற்றுமதியாகின்றன. ஆனால் ரூ 5,000 கோடிக்கு நாம் வெளிநாடுகளிலிருந்து மதுபானங்களை இறக்குமதிச் செய்கிறோம்.

இந்நிலையை மாற்ற மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் போன்ற மதுபானங்கள் அதிகம் விற்கும் மாநிலங்கள் முன் வந்தால் அவற்றின் வருவாயும் உயரும், மனித உயிர்களும் காக்கப்படும். இந்தியாவில் ஆண்டு தோறும் ரூ 2 இலட்சம் கோடி அளவிற்கு மதுபான விற்பனை மூலம் மாநிலங்களுக்கு வரி வருவாயும், முதலீட்டு பங்கு வருவாயும் கிடைக்கிறது, தமிழகத்தில் சராசரியாக ரூ 30,000 கோடி வருவாயாக கிடைக்கிறது. மாநில அரசு மனது வைத்தால் விற்பனையை அதிகரிக்க மட்டுமின்றி ஏற்றுமதியின் மூலமும் கூடுதல் வருவாய் கிடைக்கும். தரமான மதுவகைகளுக்கு உலகம் முழுதும் வரவேற்பு எப்போதும் உண்டு. அரசு நிறுவனம் தீவிரமாக சந்தைப்படுத்துதலைச் செய்ய வேண்டும். இதற்கு விளம்பரங்கள் பரவலாகவும், திறமையான விற்பனை வலைப்பின்னலுமே தேவை. குறிப்பாக சுற்றுலாத் துறையின் மூலமும், வானூர்தி நிலையங்களில் வரியில்லா விற்பனை நிலையங்கள் மூலமும் தேவைகளை உருவாக்க வேண்டும். வெளி நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிற்குள்ளும் மலிவான, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத மதுபானங்களுக்கு வரவேற்பு உண்டு. எனவே துவக்கத்தில் ஆண்டிற்கு ரூ 5,000 கோடி அளவில் வருவாய் வந்தாலும் பின்னர் இது ஒரு இலட்சம் கோடி வரையிலும் செல்ல வாய்ப்புண்டு.

கழிவு நீரில் எரிபொருள் தயாரிப்பு

சென்னையின் மக்கள் தொகை ஏறக்குறைய ஒரு கோடி. இதேபோல இதர 10 மாநகராட்சிகளிலும் சேர்த்தால் அவற்றிலும் ஒரு கோடி மக்கள் தொகை இருக்கலாம். எனவே இங்கு அடிப்படை வசதிகளான, குடி நீர் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வசதிகள் பரவலாகச் செய்யப்பட்டிருக்கும். இதில் என்ன முக்கிய விஷயம் என்றால் கழிவு நீரை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள், எவ்வளவு லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்கிறார்கள், எத்தனை லிட்டரை சுத்திகரிப்புச் செய்யாமல் நீராதாரங்களிலோ, கடலிலோ விடுகிறார்கள் என்பது. ஏனெனில் நீர் என்பது முக்கிய வளம். மேலும் பற்றாக்குறையுள்ள வளம். எனவே கழிவு நீர் மறுசுழற்சி என்பது தவிர்க்க இயலாதது. ஆயினும் சென்னையில் ஏறக்குறைய 50% கழிவு நீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மற்ற மாநகராட்சிகளில் எவ்வளவு என்பது தெரியாவிட்டாலும் சென்னையை விடக் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. பல அறிவியல் ஆய்வுகளில் இக்கழிவு நீரை எவ்வாறு மறுசுழற்சி செய்து வணிக ரீதியில் இலாபமடைவது என்று முயன்றுள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூட அமெரிக்க நிறுவனம் ஒன்று கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும் என்று கூறியிருந்தது.

டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சன் டயல் பார்க் (பாரபுல்லா) எனும் இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீரில் இருந்து தூயக் குடிநீரை உற்பத்தி செய்வதோடு அல்லாமல் அதில் உப பொருளாக உயிர்ம எரிபொருளையும் பெறும் திட்டம் ஒன்றைத் துவக்கி வைத்தார். இது ஒரு சோதனை திட்டமாக துவங்கப்பட்டது. இவை முன்னுதாரணங்களே. சென்னையிலும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறார்கள். ஆனால் பண்பாட்டுத் தடைகள் காரணமாக கழிவு நீரை தூயக்குடிநீராக மாற்றினாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். எனவே அதை விடுத்து கழிவு நீரிலிருந்து உயிர்ம எரிபொருளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். டெல்லியில் சோதனை முயற்சியில் 10 இலட்சம் லிட்டரில் 3 டன் உயிர்ம எரிபொருளைத் தயாரிக்க முடியும் என்று கணக்கிட்டுள்ளார்கள். சென்னையிலும் இது போன்ற திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டால் அரசின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையக்கூடும். சென்னையில் வெற்றி கிட்டினால் மற்ற மாநகராட்சிகளிலும் இதை செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய சூழலில் இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு மட்டுமின்றி ஐநாவின் மூலமும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், நிதியுதவிகளையும் பெற முடியும். இத்துடன் இணைத்து குப்பைகளை உரமாக்கும் திட்டத்தையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை பெருக்குவதோடு தூய்மையையும் மேம்படுத்த முடியும்.

கோயில் சுற்றுலா திட்டம்

கொரோனாவினால் முற்றிலும் முடங்கியிருக்கும் தொழில் சுற்றுலாத் தொழிலாகும். தமிழகம் முக்கியமான சுற்றுலா இடமாகவுள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டுப் பயணியர் அதிகம் பேர் வருவதற்கான முக்கியக் காரணம் கலையழகு மிக்கக் கோயில்களாகும். தமிழகத்தின் முக்கியக் கோயில்கள் பல மாவட்டங்களில் பரவி கிடக்கின்றன. குறிப்பாக தென் தமிழகம், ஒன்றிணைந்த தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகம் புகழ்பெற்றக் கோயில்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரை தனித்தனியாக கோயில்களுக்கு செல்வது கடினம். இதைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பேருந்துகளையும், இரயில்களையும் ஏற்படுத்தினால் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். கூடுதல் வசதிகளை தனிச்சிறப்புக் கட்டணத்தில் அளிப்பது வருவாய் அதிகம் ஈட்ட வழி செய்யும். இதற்காக தனி பேக்கஜ்களையும் உருவாக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாத்துறை உலகம் முழுதும் துளிர் விடும் நேரத்தில் நாமும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாலை மேம்பாட்டு வரி

சாலை விபத்துக்கள் அதிவேகமாக செல்வதாலேயே ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தற்போது ஃபாஸ்ட் டேக் வந்த பிறகு சுங்கச்சாவடிக் கட்டணம் முழுமையாக அரசுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே. இதர சாலைகளை இடவும், பராமரிக்கவும், விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கவும் என பல செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும் இதற்காக தனிக்கட்டணமோ, வரியோ இல்லை. இருந்தாலும் சொற்ப அளவில்தான் உள்ளன. எனவே சாலைகளின் மேம்பாட்டிற்காக எரிபொருள்களின் மீது கூடுதல் வரியாக 1% மாநில அரசு வசூலிக்க வேண்டும். மேலும் எஸ் யூ வி போன்ற சொகுசு வாகனங்களின் பதிவின் போதே வாகனக் கட்டணமாக வாகன மதிப்பில் 2% அரசு வசூல் செய்ய வேண்டும். ஏனெனில் விலை அதிகமுள்ள வாகனங்களுக்காக சாதாரண பைக் முதல் சரக்கு கட்டண வாகனங்கள், அரசுப் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவையும் சாலைக் கட்டணங்களை ஏற்கின்றன, இது அநீதி. எனவே அனைவரும் ஒரே மாதிரியாக இல்லாமல் சொகுசு வகை வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும். இப்போதிருக்கும் வரிகளுடனோ அல்லது தேவையான மாற்றங்களைச் செய்தோ இக்கட்டணங்களை வசூலிக்கலாம்.

அரசு ஊழியர்கள் சிறப்பு சேமிப்புத் திட்டம்

அரசு இயந்திரத்தைப் பழுதின்றி இயங்க வைக்கும் பொறுப்புடைய அரசு ஊழியர்களுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் பொறுப்பும் உண்டு. அந்த அடிப்படையில் இப்போதிருக்கும் நிதிச் சிக்கலைக் கருத்திற்கொண்டு அரசு ஊழியர்களில் குடிமைப் பணி அதிகாரிகள், மாநில அரசின் பணியாளர் தேர்வுக்குழு மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள், இன்ன பிற ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களில் மாதம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மேல் மொத்த ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களும் தன்னார்வ சேமிப்பு திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 10,000 தை தனிச் சேமிப்புக்கணக்கில் சேமிக்க வேண்டும். இதில் சேர்ந்தால் சம்பளத்திலிருந்தே அத்தொகை பிடிக்கப்பட்டு விடும். இவ்வாறு ஆண்டிற்கு ரூ. 1,00,000 வரை குறைந்தபட்சம் சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கோ அல்லது 3% சிறப்பு வட்டியோ வழங்கப்படும். இத்தொகைக்கு மேலும் சேமிக்கலாம். முதிர்வு காலம் ஐந்தாண்டுகளாகும். முதிர்வு காலம் முடிந்த பிறகே வட்டி கணக்கிடப்பட்டுக் முழு சேமிப்புத் தொகையுடன் திரும்ப வழங்கப்படும். வட்டிக்கும் வருமான வரி விலக்கு வழங்கப்படலாம். வருமான வரிச் சலுகைப் பெற விரும்புவோர் இத்தொகையை தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆண்டு இறுதியில் வழங்கப்படும் ஃபார்ம் 16 கீழோ குறிப்பிட்டு சலுகையைப் பெறலாம். தமிழகத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 14 இலட்சம். இதில் 40% பேர் இத்திட்டத்தில் இணைந்தாலும் கூட சுமார் 5 இலட்சம் பேர் வரையில் பங்குபெறலாம். விரும்பினால் தனியார் துறையிலும் இதே அளவு ஊதியம் பெறும் அதிகாரிகளும் இணைந்துக் கொள்ளலாம்.

ரமேஷ்பாபு

error: Content is protected !!