June 2, 2023

உ.பி.யில் தடையை மீறியதாக ராகுல்காந்தி கைது!

உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் ஹாத்ராஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹாத்ராஸ் நோக்கி பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர். எனினும் அவர்கள் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல்காந்தியின் கார் செல்வதற்கு இடமளிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையையொட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க ஹாத்ராஸ் பகுதி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.