777 சார்லி – விமர்சனம்!

777 சார்லி – விமர்சனம்!

சினிமாக்களில் குறிப்பாக இந்தியத் திரைப்படங்களில் விலங்குகளை வைத்து படமெடுக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வந்த பிறகு விலங்குகளை வைத்து படமெடுப்பது அரிதான விசயமாகி விட்டது. நம் தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்த்ல் தேவர் பிலிம்ஸ், ராம நாராயணன் ஆகியோர் வளர்ப்புப் பிராணிகள், விலங்குகள் ஆகியவற்றை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை வசூல் படங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் செய்தது போல இப்போது படங்களைத் தயாரிக்கவும், இயக்கவும் யாருமில்லை. ஆனாலும் எப்போதாவது ஒரு முறை விலங்குகளை மையமாக வைத்து படங்கள் வருகின்றன. அப்படியான ஒரு படமே 777 சார்லி..அதிலும் ஒரு நாய்-யை நாயகனாக வைத்து உருவாகி இருக்கும் படமிது.

இப்படக் கதை என்னவென்றால் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் ரக்ஷித் ஷெட்டி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார். யாருடனும் பழகாமல் தனக்கென்று தனி உலகத்தில் வாழ்ந்து வரும் ரக்ஷித் ஷெட்டியிடம் ஒரு நாய் வழி மாறி கிடைக்கிறது. முதலில் நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி அதன்பின் அதனுடன் பழக ஆரம்பிக்கிறார். நாயும் ரக்ஷித் ஷெட்டியை விட்டு செல்ல மறுக்கிறது. ஒரு கட்டத்தில் நாய்க்கு கேன்சர் இருப்பது ரக்ஷித் ஷெட்டிக்கு தெரிய வருகிறது. நாய் மீது அன்பு பாசம் வைத்திருக்கும் ரக்ஷித் ஷெட்டியால் இதை தாங்க முடியவில்லை. இறுதியில் நாயை ரக்ஷித் ஷெட்டி குணப்படுத்தினாரா? இல்லையா? என்பதே 777 சார்லி.

ஹீரோ ரோலில் பாதியாக நடித்திருக்கும் ரக்‌ஷித்ஷெட்டி தனக்கு இம்பார்ட்டெண்ட் கிடையாது என்பதை உணர்ந்தே நடித்து அசத்தி இருக்கிறார். சார்லி என்னும் முன் பின் அறிமுகம் இல்லாத நாயிடம் மாட்டிக் கொண்டு ரக்‌ஷித் அனுபவிக்கும் கொடுமைகள் அதன்பின் அனுபவிக்கும் பேரானந்தம் அதற்குப்பின் வரும் பெரும்சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரக்‌ஷித்.

இரக்ஷித் ஷெட்டிக்கு ஈக்வெலாக சார்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. பல இடங்களில் அபார நடிப்பால் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. ஆரம்பத்தில் தனது சுட்டித்தனத்தாலும், சேட்டைகளாலும் நம்மை சிரிக்கவைக்கும் சார்லி, தனது நுணுக்கமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நம் கண்களை குளமாக்கிவிடுகிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் பாபி சிம்ஹா. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

முரடனுக்குக் காதல் வந்தால்? என்கிற கதைகளை ஏராளமாகப் பார்த்துவிட்டோம், இந்தப்படத்தில் முரடனுக்கு இன்னொரு உயிர்மீது காதல் வந்தால்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை மிக அழகாக ரசிக்கும்படி படம் பிடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் எஸ்.காஷ்யப் கேமாரா வழியே மனித உணர்வுகளைக் காட்டியது மட்டுமின்றி தெற்கிலிருந்து வடக்குவரை இந்தியவை அட்டகாசமாகச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள். நோபின்பால் இசையில் படத்தின் கதைசொல்லிச் செல்கின்றன பாடல்கள். பின்னணி இசையும் இயல்பு.

நாயை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து இருக்கிறது. மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள பாசத்தை எமோஷனல் குறையாமல் கொடுத்த இயக்குனர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள். நாயை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

எடிட்டர்தான் கொஞ்சம் சுணங்கி விட்டார்

ஆனாலும் இந்த ‘777 சார்லி’ – சகல தரப்பினரையும் கவரும்

மார்க் 3/5

error: Content is protected !!