பன்னாட்டுக் குடும்ப நாள்!

பன்னாட்டுக் குடும்ப நாள்!

வீனமயமாகிக் கொண்டே இந்த உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் ‘விரிசல்’ உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் குடும்ப கட்டமைப்புகளை பின்பற்றுவதில் முதன்மையான இடம் வகிப்பது மனிதன். குழுக்களாக வாழத் தொடங்கி இன்று குடும்பம் என்ற அமைப்பில் தொடர்கிறது. குடுமபம் என்பதற்கான வரையறை ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கலாம். ஆனால், உண்மையில் குடும்பம் என்பது வெவ்வேறான உலகங்கள் கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கூட்டில் வாழ்வதுதான். ஒரே கூரையின் கீழ் வாழ்தல் என்பது எளிதானது அல்ல. ஆனால், ஒவ்வொருவரின் மெனக்கடலும், அன்பும் அதனை அழகாக மாற்றுகிறது. முக்கியமாக, குடும்பம் என்ற அமைப்பின் தலையாய கடமை என்னவென்றால் அதன் உறுப்பினர்களுக்கு ‘ அன்பும் ஆதரவும்’ வழங்குவதுதான். இன்றைய காலக்கட்டத்தில் குடும்பம் என்பது எப்பப்பட்டதாக இருக்கிறது என்றும் கேள்வியும் எழுகிறது. குடும்ப உறுப்பினர்களில் தனிநபரின் மன ஆரோக்கியமே கும்பம் என்ர ஒன்றை அர்த்தப்படுத்துகிறது. அப்படியிருக்க, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைந்து வருகிற நிலையில், அனைவரும் இதுகுறித்து சிந்திக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

நகரமயமாக்கலால் பாரம்பரியமாக இருந்த கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக் குடித்தன விகிதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அந்த கணிப்பு அரங்கேறி வருகிறது. சமுதாயத்தின் முதல் நிறுவனமே குடும்பம் தான் எனும் நிலையில், அது ஆட்டம் காண்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின், நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பதாக இருக்கிறது. இன்றைக்கு பல குடும்பங்களில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும், தொலைக்காட்சியும், செல்போனும், இணையமும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதேபோல், தங்களது பெற்றோர்களையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் அவலமும் அரங்கேறி வருகிறது. உலகம் முழுவதும் பலர், வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

அண்மையில் இது குறித்த குறும்படம் ஒன்றை பார்த்த போது, வெளிநாட்டில் வாழும் மகன் தனக்கு என்ன தான் வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தாலும், நான்கு சுவர்களுடன் வாழ மனமில்லாமல் முதியோர் இல்லம் சென்று தங்கும் பெற்றோரின் மனநிலை நமது மனதை உறுத்த தவறவில்லை.சில நேரங்களில் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து செயல்படுகிற இந்த இயந்திரமய வாழ்க்கையின் வெறுமை நம்மை உறுத்தக்கூடும். ஆனால், அது இனம் புரியாத வெறுமையாகவே இருக்கிறதே தவிர அதற்கு மாற்றுவழி என்ன என்று நாம் ஆராய்வதில்லை.

அன்றாடம் மனிதர்கள் குடும்பம், வேலையிடம், சமூகம் என்ற மூன்று வேடங்களை ஏற்க நேரிடுகிறது. அதில், பின்வரும் இரண்டும் எப்போது வேண்டுமானாலும் மாற்றத்திற்குள்ளாகலாம். ஆனால், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும் என்றும் மாறாதது குடும்பம்தான். எனினும், வேலையிடம், சமூகம் ஆகிய இரண்டும் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு குடும்ப உறவுகளுக்கான நேரத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதை தவிர்க்க குடும்ப உறவுகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, அவர்களுக்குரிய நேரத்தையும் சரியாக ஒதுக்க வேண்டும். முக்கியமாக உறவுகளை பலப்படுத்துவதற்குரிய பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சர்வதேச குடும்பங்கள் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் உலக குடும்ப தினமும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர். உண்மையில், பல இந்தியர்கள் கூட்டு குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர். சர்வதேச குடும்ப தினத்தை நீங்கள் கொண்டாட பல வழிகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பல ஆண்டு காலத்திற்கு ஒரே குடும்பமாக வாழலாம்.

அதே சமயம் குடும்பம் என்பது ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டப்பட வேண்டிய ஒன்று இல்லை. வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, சின்ன சின்ன விஷயங்களை கவனித்து பேசி விடுவடுவது நல்லது. குடும்பத்தில் பேசுவது குறையும்போது, அங்கு அமைதியும் குறைந்து பிரச்சினை எழுகிறது. குடும்பத்தை கொண்டாடுவது என்பது அதன் உறுப்பினர்களை கொண்டாடுவதே!

ஆகவே அன்புடனும் குடும்பத்தை பராமரியுங்கள். இனிய குடும்பதின வாழ்த்துகள்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!