இலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே!

இலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே!

இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே நான்காவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நாளை பொறுப்பேற்கின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 225 இடங்களில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் இலங்கை மக்கள் கட்சி கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். வடக்கு கொழும்புவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அதிபரும், மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபயா ராஜபக்சே, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த முறை தமிழர் பகுதிகளிலும் ராஜபக்சே வின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. மேலும் தமிழ் கட்சிகளும் ராஜபக்சேவுடன் கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்தித்தது. இது போன்ற சில விடயங்களால் ராஜபக்சே தமிழர் இடையேயான விரோத போக்கு குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலங்கையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதையடுத்து நாடாளுமன்றம் வரும் 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது திருத்தத்தின்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த திருத்தத்தை ரத்து செய்து, அதிபரின் அதிகாரத்தை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கு மேல் தேவை. இப்போது ராஜபக்சவுக்கு அந்த அதிகாரம் வந்திருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!