ஹஜ் யாத்திரை: இந்தியாவிலிருந்து செல்ல இந்தாண்டு அனுமதி இல்லை!
இதுவரை கட்டுக்குள் வராத கொரோனா தொற்றால் சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற் கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹஜ் புனிதப் பயணம் செல்லத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்னும் அடங்காத கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டினர் இஸ்லாமிய யாத்திரை மேற்கொள்வதைத் தடுத்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா மந்திரி முகமது சலேஹ் பின் தாஹர் பெண்டன் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு இந்தியாவில் இருந்து யாத்ரீகர்களை அனுப்ப வேண்டாம் என்று பரிந்துரைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நக்வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்ப தாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும். இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.