ஜூலை மாதத்தில் 72 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!- காரணம் என்ன? தடை செய்யப்பட்டால் என்ன செய்வது?

ஜூலை மாதத்தில் 72 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!- காரணம் என்ன? தடை செய்யப்பட்டால் என்ன செய்வது?

வாட்ஸ் அப் செயலினானது உடனடி மெசேஜிங் தளமாக அறிமுகமாகி, தற்போது கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தே வைத்துள்ள முன்னணி சமூக ஊடகமாக திகழ்கிறது. பயனர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால், வாட்ஸ் அப் கணக்குகள் ஸ்பேமர்கள் மற்றும் ஹேக்கர்களால் குறிவைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. போலிச் செய்திகளைப் பரப்பி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, மாதந்தோறும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கை புதுப்பிப்புகளை (Updates) அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூலை மாதம் மட்டும் 72 லட்சம் இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டன. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி பயனர் பாதுகாப்பு அறிக்கையின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் வெளிப்படுத்தியது.

அந்த மாதத்தில் 72,28,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாகவும், 31,08,000 கணக்குகள் எந்த புகாரும் இல்லாமல் தடை செய்யப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட புகாரிலும் பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இப்படி திடீரென எதிர்பாராதவிதமாக உங்கள் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படாமல் இருப்பதற்கு சில சர்ச்சைக்குரிய விஷயங்களை பயனர்கள் செய்யக்கூடாது என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு கணக்கு தடை செய்யப்படுவதை தவிர்க்க வாட்ஸ் அப் செய்யக்கூடாது என்று அறிவுறுத்திய 5 முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வோமா?

1. உண்மைத்தன்மை இல்லாத செய்தியை பார்வேர்ட் செய்யாதீர்கள்!

நீங்கள் பெறும் மெசேஜ் அல்லது செய்தி உண்மையானது தானா அல்லது முறையான ஆதாரம் மூலம் காப்புப் பிரதி எடுக்கப்பட்டதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் அதை யாருக்கும் எதையும் ஃபார்வேர்டு (Forward) செய்ய வேண்டாம். ஒரு செய்தி ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தால், பயனர்கள் அச்செய்தியை அதிகபட்சம் ஒரு குழு உட்பட ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்பும் வகையில் வாட்ஸ்அப் ஏற்கனவே செய்திகளை ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. ஆட்டோமேடிக் மெசேஜ் அல்லது பல்க் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்கவும்.

அளவுக்கு அதிகமாக ஆட்டோமெடிக் அல்லது பல்க் மெசேஜ்களை (Automatic or Bulk messages) நீங்கள் அனுப்பிக் கொண்டிருந்தால் வாட்ஸ் அப் நிறுவனம் உங்கள் கணக்கை ஸ்பேம் என முடிவு செய்து தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கக்கூடும். எனவே ஆட்டோமேடிக் அல்லது பல்க் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்குமாறு வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. தேவையற்ற செய்திகளை அனுப்பும் கணக்குகளைக் கண்டறிந்து தடைசெய்ய மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தையும் பயனர்களின் அறிக்கைகளையும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

3. பிராட்காஸ்ட் மெசேஜ் வசதியை அதிகமாக பயன்படுத்தாதீர்கள்:

ஒரே நேரத்தில் பலருக்கு ஒரு குறிப்பிட்ட மெசேஜைக் கொண்டு சேர்க்கும் பிராட்காஸ்ட் மெசேஜ் (Broadcast Messages) வசதியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. பிராட்காஸ்ட் மெசேஜ்களை அடிக்கடி அனுப்புவது உங்கள் கணக்கின் மீது அதிகமான நபர்கள் புகாரளிக்க வழிவகுக்கும் என்று கூறியுள்ள வாட்ஸ்அப், பலமுறை புகாரளிக்கப்பட்டால் உங்கள் கணக்கு தடை செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

4. பிற பயனர்களின் தனியுரிமையை பாதிக்காதீர்கள்:

பிற பயனர்களின் தனியுரிமையை பாதிக்காத வகையில் நடந்துகொள்ளுமாறு வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பயனர்கள் இருக்க விரும்பாத குழுக்களில் அவர்களை ஒருபோதும் சேர்க்க வேண்டாம் என்றும் யாரேனும் உங்களிடம் மெசேஜ் செய்ய வேண்டும் என்று சொன்னால் அவருக்கு மெசேஜ் அனுப்புவதைத் தவிர்க்கவும் வாட்ஸ் அப் அறிவுறுத்துகிறது. பல முறை ஒரே பயனரால் அல்லது பல பயனர்களால் புகாரளிக்கப்படும் பட்சத்தில், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

5. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்!

வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை (WhatsApp’s Terms of Service) பயனர்கள் மீற வேண்டாம் என வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. பொய்யான செய்திகளை வெளியிடாதீர்கள் அல்லது சட்டவிரோதமான, அவதூறான, அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தையில் ஈடுபடாதீர்கள் என்று அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. “எங்கள் சேவைகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடு” (Acceptable Use of Our Services) பிரிவின் கீழ் அனைத்து பயனர் வழிகாட்டுதல்களையும் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் அதை பயனர்கள் அனைவரும் ஒருமுறை பார்வையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அது சரி இது எதிலும் சிக்காமல் இருந்தாலும் ஒருவேளை உங்கள் வாட்ஸ் அப் கணக்கு தடை செய்யப்பட்டால்..?

தற்செயலாக வாட்ஸ்அப்பில் உங்கள் கணக்கு தடைசெய்யப்பட்டால் உங்கள் கணக்கு தடை செய்யப்பட்டால் வாட்ஸ்அப் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவலை தெரியப்படுத்தும். தடை நீக்கம் தொடர்பாக நீங்கள் மின்னஞ்சல் மூலம் வாட்ஸ்அப் குழுமத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது மதிப்பாய்வைக் (review) கோரலாம்.

error: Content is protected !!