மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் நிவாரணத் தொகை ரூ.6,000 யார், யாருக்கு? எங்கே? எப்படி வங்குவது: அரசாணை வெளியீடு – முழு விபரம்!.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் நிவாரணத் தொகை ரூ.6,000 யார், யாருக்கு? எங்கே? எப்படி வங்குவது: அரசாணை வெளியீடு – முழு விபரம்!.

மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6,000 நிவாரணம். செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் தரப்படும். காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் பாதித்தோருக்கு வெள்ள நிவாரணம். ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் வட்டங்களில் பாதித்தோருக்கும் ரூ.6,000 நிவாரணம் தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அரசின் விளக்கத்தில், ‘தமிழகத்தில் 2023 டிச.3 மற்றும் டிச.4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

முன்னதாக, தமிழக முதல்வர் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் உரிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளார்.

கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம் என்றும், இதனை முறையாக கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படலாம் என்றும், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும் விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான கீழ்க்கண்ட 4 மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

🌪️ சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்

🌪️செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்,

🌪️ காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்,

🌪️ திருவள்ளூர் மாவட்டம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.

இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்து அரசு ஆணைகளை வெளியிடுகிறது.

> மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களு்ககு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும்.

> இந்த மழை வெள்ளத்தால் மத்திய மாநில அரசு மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில், அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

> நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குதல், டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணி ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிப்பதுடன், தேவாயா எண்ணிக்கையில் விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக் கடைகளில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

டோக்கன் வழங்கும் முறை:

நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எந்தவித சிரமும் ஏற்படாத வகையில் விநியோகிப்பதற்காக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காவல்துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

நிவாரண உதவிகளை வழங்கும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தொகையினை மாநில பேரிடர் நிவாரண நிதி கணக்குத் தலைப்பில் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து உரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மழை, வெள்ளம் நிவாரணத்தொகை குறித்து தமிழக அறிவித்ததால், யாருக்கு நிவாரணத்தொகை கிடைக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த சூழலில் அரசாணை மூலம் நிவாரண தொகை பெறுவோரின் தகுதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நியாயவிலை கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்படுவது குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்ததால் அதற்கான விளக்கத்தையும் அரசாணையில் தமிழக அரசு அளித்துள்ளது.

error: Content is protected !!