மக்களவையில் அத்துமீறிய இருவரால் பரபரப்பு – என்ன நடந்தது?

மக்களவையில் அத்துமீறிய இருவரால் பரபரப்பு – என்ன நடந்தது?

நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க எம்.பி.க்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பெண் ஒருவர் கோஷம் எழுப்பியபடி போலீஸார் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியிருந்தது. இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகத்தில் காவல் துறையினர், உளவுத் துறையினர், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் தற்போது அவர் மீண்டும் கூடி அலுவல்கள் தொடங்கியது. அதன்பின், அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் என்று வெளியான தகவலை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

“நான்தான் பறிந்து எறிந்தேன்” – மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம் தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திடீரென மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். அதில் ஒருவர் கையில் கேன் இருந்தது. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வந்தது. நான் அந்த நபரிடமிருந்து கேனைப் பறித்து தூக்கி வெளியே எறிந்தேன். இன்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்” என்றார்.

கைதானவர்கள் சொன்னது என்ன? – சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ளனர். இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

ஓம் பிர்லா விளக்கம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் பேசும்போது, “பூஜ்ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை என தெரியவந்துள்ளது. எனவே, புகை குறித்து அச்சப்படத் தேவையில்லை” என கூறினார்.

இதையடுத்து, வழக்கமான நாடாளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், “விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

error: Content is protected !!