சில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்!

சில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்!

கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் மத்திய அரசின் வழி காட்டுதலில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் மாதம் 30–ந் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் (மால்கள்), சினிமா தியேட்டர்கள், மெட்ரோ, மின்சார ரெயில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷோரூம்கள், நகை, ஜவுளி போன்ற பெரிய கடைகள், சென்னையை தவிர மற்ற இடங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு ஐந்தாம் கட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அம்மாவின் அரசு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

அதே நேரத்தில், அம்மாவின் அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது. மத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன்.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.-

* வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

* தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை – பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

* டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

* குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* பொது மக்கள் இ–-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப் பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். -இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Posts