5ஜி சேவை : பிரதமர் மோடி அக்டோபர் 1-–ந்தேதி தொடங்கி வைக்கிறார்

5ஜி சேவை : பிரதமர் மோடி அக்டோபர் 1-–ந்தேதி தொடங்கி வைக்கிறார்

ம் நாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அக்டோபர் 1-–ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து நேஷனல் பிராட்பேண்ட் மிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்காக, ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ என்ற ஆசியாவின் மிகப் பெரும் தொழில்நுட்ப மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆபரேட்டர்கள் சங்கம் இணைந்து ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ என்ற பெயரில் தொழில்நுட்ப மாநாட்டை 2017-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1 முதல் 4 வரை டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 5ஜி சேவையை குறுகிய காலக்கட்டத்தில் 80 சதவீதம் அளவில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “இந்தியாவின் 5ஜி பயணம் மிக உற்சாகமானதாக இருக்கப்போகிறது. பல நாடுகள் 50 சதவீதம் அளவில் இச்சேவையை கொண்டு சேர்க்க கூடுதல் காலம் எடுத்துள்ளன. ஆனால், மத்திய அரசு 5ஜி சேவையை குறுகிய கால அளவிலேயே 80 சதவீதம் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது” என்றார்.

இந்தியாவில் மொத்தம் 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு 51,236 மெகாஹெர்ட்ஸ் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க உள்ளன.

4ஜி-யைவிட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படும் 5ஜி, இந்தியாவின் தொழில்நுட்ப கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!