தமிழ் குரல் / AI Voice
பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாட்டுக்கு செல்ல முடியும். தற்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒருமதமாவது ஆகும். இதனை பொருட்டில் கொண்டு பாஸ்போர்ட் எடுக்கும் முறையை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. அதாவது டிஜிட்டல் முறையில் கொண்டுவந்துள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலி எல்லாம் வந்த நிலையிலும் நம் நாட்டில்ல் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இத்தனைக்கும் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதனை எளிமைப்படுத்தி மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தியது.
இதையடுத்து மண்டல வாரியாக பாஸ்போர்ட் வழங்கலை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி கவுன்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.
ஆனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தால்தான் பாஸ்போர்ட் பெற முடிவதாக புகார் தெரிவித்திருந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக தனியார் அமைப்பு நடத்திய ஆன்-லைன் மூலமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின்போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும்
5 சதவீதம் பேர் ஏஜென்டுகள் மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலேயே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெற்று வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகளை சமூக விரோதிகள் பயன்படுத்துவதாகவும், இதனை முழுமையாக ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

