கண்டெய்னர் லாரியில் 39 பேரின் சடலங்கள்!- இங்கிலாந்து ஷாக் ரிப்போர்ட்!

வர வர இந்த கண்டெய்னர் லாரிகளில் என்னதான் கொண்டு வருவது, கடத்துவது அல்லது வைத்திருப்பது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. சிலர் கண்டெயினரில் ஆபீஸ், வீடு, ரெஸ்ட் ரூம் எல்லாம் அமைத்து வாழ்வது அதிகரிப்பது ஒருபக்கம் என்றால் இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது கண்டறிந்து உள்ளனர்.
இந்நிலையில் பெல்ஜியத்திலிருந்து கப்பல் மூலம் லண்டன் வந்த கண்டெய்னர் நேற்று லாரியில் வைத்து லண்டனின் கிரேய்ஸ் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை காவலாளிகள் சோதனை செய்தபோது, அதில் பெண்கள் உள்பட 39 பேரின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்து செய்யப்பட்டார்.
இதை அடுத்து புதன்கிழமை அன்றே டில்பரி டாக்ஸில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்கு லாரியை கொண்டுசென்றனர். மீட்கப்பட்ட உடல்களை பாதுகாத்து நடந்தது என்ன என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 39 உடல்களையும் ஆராய்ந்து இறந்தது யார் யார் என்று அடையாளம் காண்பது “மிக நீண்ட செயல்முறையாக இருக்கும்” என்று எஸ்செக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலில் பல்கேரியாவிலிருந்து இந்த லாரி வந்ததாக எசெக்ஸ் காவல்துறையினர் சந்தேகித்தனர், ஆனால் பிறகு அது பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் நினைக்கின் றனர். இந்த லாரி ஐரிஷ் குடியுரிமையுள்ள ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் தங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பல்கேரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இறந்தவர்களின் சடலங்கள் எப்போது கன்டெயினருக்கு மாற்றப்பட்டது அல்லது இந்த சம்பவம் பெல்ஜியத்தில் நடந்ததா என்ற தெளிவு இன்னும் கிடைக்கவில்லை என்று பெல்ஜியன் ஃபெடரல் அரசு வழக்குரைஞர் அலுவலகம் கூறியுள்ளது.
இது “கற்பனை செய்யமுடியாத சோகம். இது உண்மையிலேயே இதயத்தை நொறுக்குகிறது ” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.