தமிழகத்தில் குழந்தைகள் மிஸ்சிங் + இளம் வயது திருமணங்கள் அதிகரிப்பு!
தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியானது. 2014ம் ஆண்டு 441 குழந்தைகள் காணாமல் போனதாகவும், 2015ல் இந்த எண்ணிக்கை 656 ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதனிடையே தமிழகத்தில் இளம் வயதுத் திருமணங்களைத் தடுக்க சட்டமும், கண்காணிப்பும் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 2,000-க்கும் மேற் பட்ட இளம் வயதுத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் 4,000-க் கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

2014ம் ஆண்டு சென்னையைப் பொறுத்த வரையில்114 குழந்தைகள் காணமல் போனதாகவும், கடந்த ஆண்டு 71 பெண் குழந்தைகள் உள்பட 149 குழந்தைகள் காணாமல் போனதாகவும், இந்த ஆண்டு இதுவரை 58 குழந்தைகள் மாயமாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதும், ஆணையம் தானாக முன்வந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
குழந்தைகள் காணாமல் போகும் விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை மனித உரிமை ஆணையம் வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில்தான் ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இதற்குக் குறைந்த வயதில் திருமணம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறப்பின்போது பிரச்னைகள் ஏற்படும். பிரசவத்தின்போது மரணமும் ஏற்படும் என்ற நிலையில், இளம் வயதுத் திருமணங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இளம் வயதுத் திருமணத்தை ஆதரிப்போரும் தண்டிக்கப்படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.ஆனாலும் தமிழகம் முழுவதும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 2000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் சமூக நலத் துறை, காவல் துறை உதவியோடு தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், இதே கால கட்டத்தில் வெளியில் தெரியாமல் 4,000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சொத்துகள், சொந்த பந்தம் விட்டுப் போகாமல் இருத்தல், குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே இவர் இன்னாருக்கு என்று தெரிவிக்கப்படும் தகவல்கள், காதல் போன்ற காரணங்களால் இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் இளம் வயதுத் திருமணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் 5,480 இளம் வயதுத் திருமணங்கள் சென்னை யில் நடைபெற்றுள்ளன. சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூரில் 3,025 இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்துள் ளன. மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங் கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதுத் திருமணங்கள் கிராமப்புறத்தில்தான் அதிகம் நடைபெறுவதாக, இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதிக மக்கள் தொகை இருக்கிற நகர்ப்புறங்களில்தான் இளம் வயதுத் திருமணங்கள் தற்போது நடைபெறுகின்றன என்பதை இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சமூக நலத் துறை அலுவலர்களிடம் கேட்ட போது, “ இளம் வயதில் திருமணம் நடத்தி வைத்தால் சம்பந்தப்பட்ட ஆண், பெண் பெற்றோர், அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், ஏற்பாடு செய்த வர்கள், இடம் கொடுத்த திருமண மண்டப மேலாளர் அல்லது உரிமையாளர் கைது செய்யப்படுவார். திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய வரும்போது இருவரும் திருமண வயதுடையவர்கள் என்ற சான்றிதழ் கொடுத் தால்தான் மண்டபம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் சட்டத்தில் உள்ளன. அதே போல, மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் ஊராட்சி அளவிலும் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்தக் குழுவில் அந்த ஊரின் பள்ளித் தலைமையாசிரியர்கள், பெண் வார்டு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனப் பெண் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளால் இளம் வயதுத் திருமணங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றனர். சட்டமும், கண்காணிப்பும் தீவிரமாக இருந்தபோதிலும், இன்னும் இளம் வயதுத் திருமணங்கள்உம் இளம் குழந்தைகள் கடத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை முழுவதுமாகக் கட்டுப்படுத்த மக்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இதைக் கண்காணிக்கும் சமூக அலுவலர்களின் கருத்து.


