செய்தியைக் கேட்க / Listen to News
உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியான பணவீக்க அலைகளிலிருந்தும் சந்தை நிலையின்மையிலிருந்தும் மெல்ல மீண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான ஜேபிமோர்கன் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் சமீபத்திய ஆய்வு அறிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே உலகளாவிய அளவில் உணவுப் பணவீக்கம் கிட்டத்தட்ட 5 சதவீதத்தை எட்டி, கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் சர்வதேச விலை உயர்வு பேரபாயத்தையும் உருவாக்கும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. உலகளவில் விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் ரசாயன உரங்களின் தட்டுப்பாடு, உலகின் முக்கிய தானியப் பகுதிகளை முடக்கியுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பசிபிக் பகுதியில் உருவெடுக்கும் சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் ஆகிய மூன்று பிரதான காரணிகள் ஒன்றாக இணைந்து இந்த நெருக்கடியை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிரமாக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பருவகால மழையை நம்பியிருக்கும் விவசாயக் கட்டமைப்பு மற்றும் உர இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், இந்த வரவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடியால் நேரடியாகவும் மிகக் கடுமையாகவும் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதை இந்த விரிவான ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உரப் பற்றாக்குறை மற்றும் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி
நவீன விவசாயத்தின் முதுகெலும்பாகத் திகழும் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விநியோகச் சங்கிலியில் உலகளவில் ஏற்பட்டுள்ள தொடர் இடையூறுகள், சர்வதேசப் பயிர் உற்பத்தியை வரலாறு காணாத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை உயர்வு, பிரதான உர ஏற்றுமதி நாடுகளின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் உரங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக ஏற்பாடும் கடும் சப்ளை தட்டுப்பாட்டினால், சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்களுக்குத் தேவையான அளவு உரங்களை வாங்க முடியாமல் அதன் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதால், உலக மக்களின் பிரதான உணவாக இருக்கும் கோதுமை, அரிசி, சோளம், மக்காச்சோளம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் மகசூல் ஏக்கருக்கு பெருமளவில் சரிவடையும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த விளைச்சல் வீழ்ச்சியானது சந்தையில் தானியங்களுக்கான தட்டுப்பாட்டை அதிகரித்து, ஒட்டுமொத்த விவசாயப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, உலகளாவிய உணவுச் சங்கிலியில் சங்கிலித் தொடர் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
புவிசார் அரசியல் பதற்றங்களும் வர்த்தகத் தடைகளும்
உலகின் பிரதான உணவுத் தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி மையங்களாகத் திகழும் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நீடித்து வரும் ஆயுத மோதல்களும் எல்லைப் புவிசார் அரசியல் பதற்றங்களும், சர்வதேச விநியோகச் சங்கிலியின் இயல்பு நிலையை முற்றிலுமாக முடக்கியுள்ளன. முக்கியமாக, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் போன்ற சர்வதேசக் கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகக் சரக்குக் கப்பல்கள் நீண்ட தூர மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் எரிபொருள் விரயம் ஆகியவை பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் நிலவும் அநிச்சய நிலையை எதிர்கொள்ளும் வகையில் பல நாடுகள் தங்களின் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், தானிய ஏற்றுமதிக்குக் கூடுதல் வரிகளை விதிப்பதோடு முழுமையான ஏற்றுமதித் தடைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்தகைய வர்த்தகக் கெடுபிடிகளும் வணிகப் பாதைகளில் நிலவும் சிக்கல்களும், உணவுப் பொருட்கள் இறக்குமதி நாடுகளைச் சென்றடைவதில் பெருமளவு காலதாமதத்தை ஏற்படுத்தி, சந்தைகளில் செயற்கையான தட்டுப்பாட்டையும் கட்டுப்பாடற்ற விலை ஏற்றத்தையும் உருவாக்குகின்றன.
ஓய்வூதியக் காலச் சேமிப்பைக் கரைக்கும் மளிகைப் பொருட்கள் விலை உயர்வு
அமெரிக்க விவசாயத் துறையின் (USDA) கணிப்புகளின்படி, அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை 12.3 சதவீதம் வரை கடுமையாக உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்த முக்கிய எச்சரிக்கையை நிதி நிறுவனங்கள் முன்னிறுத்தியுள்ளன. இந்த விலைவாசி உயர்வு, நிலையான மாத வருமானம் அல்லது குறிப்பிட்ட ஓய்வூதியச் சேமிப்பை மட்டுமே முழுமையாக நம்பி வாழும் ‘பேபி பூமர்ஸ்’ (Baby Boomers) எனப்படக்கூடிய மூத்த குடிமக்களின் நிதி நிலையை நேரடியாகப் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் இந்த அதிவேகப் ஏற்றம், அவர்களின் ஓய்வுக் காலச் சேமிப்புக் கணக்கை (Nest Egg) மிக வேகமாகப் பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஓய்வுக்காலத்தில் இருக்கும் நபர்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் அன்றாட நிதித் திட்டமிடலை மறுபரிசீலனை செய்து, பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து சேமிப்பைப் பாதுகாக்கும் முதலீட்டு உத்திகளை நோக்குவது அவசியமாகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் சக்திவாய்ந்த எல் நினோ
இயற்கையின் மாறுபட்ட போக்கும் இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பப் மாற்றத்தால் உருவாகும் எல் நினோ நிகழ்வு, 2027 ஆம் ஆண்டில் வழக்கத்தை விட மிகச் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று வானிலை மாதிரிகள் காட்டுகின்றன.

இதன் காரணமாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சியும், தென் அமெரிக்க நாடுகளில் எதிர்பாராத வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவகால மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் நாடுகளுக்கு இந்த தீவிர காலநிலை மாற்றம் பேரடியாக அமையும்.
இந்தியாவிற்கு ஏற்படும் சவால்களும் ஆபத்துகளும்
ஜேபிமோர்கன் சுட்டிக்காட்டியுள்ள அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான விவசாயம் பருவமழையைச் சார்ந்தே உள்ளது. எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்க்கும் பட்சத்தில், நாட்டின் நெல் மற்றும் பருப்பு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படும். மேலும், இந்தியா தனது உரத் தேவைகளுக்கு அதிகளவில் இறக்குமதியையே நம்பியிருப்பதால், சர்வதேச சந்தையில் உர விலை உயர்வு நாட்டின் விவசாயச் செலவை உயர்த்தும். இது உள்நாட்டில் உணவுப் பணவீக்கத்தை 5 சதவீதத்திற்கும் அதிகமாகக் கொண்டு செல்லக்கூடும்.
எதிர்கால விளைவுகளும் தீர்வைக் காண வேண்டிய அவசியமும்
உணவுப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை வரவு செலவைக் கடுமையாகப் பாதிக்கும். வளர்ந்து வரும் நாடுகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசாங்கங்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பு இருப்பை உயர்த்திக் கொள்ளுதல், இயற்கை உரங்கள் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் போன்ற மாற்று விவசாய முறைகளை ஊக்கப்படுத்துதல், சர்வதேச அளவிலான தானியக் கையிருப்பை முறைப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகிறது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்

