ஹனுமந்தப்பா காலமானார் : – நாடெங்கும் சோகம்.
காஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 20,500 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனி மலை யில் அன்னிய சக்திகள், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், எதிரிகளின் நடமாட்டத்தை கண் காணிக்கவும் நமது ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஆம். உலகிலேயே உயரமான போர்க் களமான சியாச்சினை பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர்.ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.

இந்திய ராணுவத்திலேயே மிக பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கை யிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது.
அது சரி இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?
கடந்த 1639ஆம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்திய கம்பெனி முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. எனினும் 1758ஆம் ஆண்டு தான் 100 சிப்பாய்கள் கொண்ட படையாக உருவானது. மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம முதலில் ஒப்படைக்கப் பட்ட பணி.
அந்த காலககட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆனால் சுதந்திரத்துக்கு பின் இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமெண்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாக கொண்டு இயங்குவதால் இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம். ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளு ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான். அடுத்து வாஜ்பாய் அரசில் 1998ஆம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.
அதுமட்டுமல்ல இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத் தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென் டில்தான் கழித்தார்.இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை பாதுகாத்து வருகிறது. கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரிக்கும் குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது.பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா” ஏ வீர மதராசி அடி ..கொல்லு அடி ..கொல்லு” என்பதுதான்…
இப்படி உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 10 வீரர் கள் கடந்த 3–ந்தேதி ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவில் சிக்கினர். 35 அடி ஆழத்தில் பனிக் கட்டிக் குள் அவர்கள் புதையுண்டனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில் தமிழக வீரர்கள் 4 பேர் உள்பட 9 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதால் அவர்கள் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் மருத்துவ உலகமே அதிசயிக்கும் விதமாக, 6 நாட்களுக்கு பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் ராணுவ ஹெலி காப்டர் மூலம் சியாச்சின் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப் பட்டு தீவிர சிகிச்சைக்காக ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் பனியில் புதை யுண்டு கிடந்ததால் அவருடைய கல்லீரல், சிறுநீரகங்கள் செயல் இழந்து அவர் கோமா நிலையை அடைந்தார்.
அவருக்கு ராணுவ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவருடைய உயிரை காப்பாற்ற போராடினர். ஹனுமந்தப்பாவின் உடலில் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹனுமந்தப்பாவின் சிறுநீரக செயல்பாடு மோசமான நிலையிலே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மூச்சுவிடவும் சிரமப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. காலையில் கூட பரிசோதனை செய்த டாக்டர்கள் தரப்பில் அவருக்கு உயிர் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் 11:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்த தால் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ”நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டு அவர் மறைந்து விட்டார். ஹனுமந்தப்பாவிற்கு எனது இரங்கல். அந்த வீரர் எப்போது நம் நினைவில் இருப்பார்.இந்தியாவிற்கு சேவை செய்வதற்காக உயிர் தியாகம் செய்த அவரை நினைத்து பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


