ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஸ்மூத்!
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியான முறையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. 82.54 சதவீத வாக்குகள் பதிவாகின. முந்தைய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை விடக் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

இத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சீ. வளர்மதி, திமுக வேட்பாளர் என். ஆனந்த், பாஜக வேட்பாளர் மு. சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் க. அண்ணாதுரை உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கென தொகுதி முழுவதும் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 1,572 பணியாளர்களுடன், 355 நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
10 குழுக்களாக வந்திருந்த 800 துணை ராணுவப் படையினருடன், 77 அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டிருந்த 79 வாக்குச்சாவடிகளில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்குப்பதிவை “வெப்கேமரா’ மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் அலுவலகத்திலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிந்தது. 81.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக திருச்சி கலெக்டர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 60 வாக்காளர்கள் நேற்று வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 976 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 77 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 82.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.16-ந்தேதி (திங்கட்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பகல் ஒரு மணிக்குள் முடிவு தெரிந்து விடும்.


