விசா மோசடி-பெண் தூதர் தேவயானி மீதான வழக்கு தள்ளுபடி; அமெரிக்க கோர்ட் அதிரடி!
விசா மோசடியில் கைதான பெண் துணைத்தூதர் தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.ஜனவரி 8ம் தேதி தேவயானி, ஐநா சபைக்கான சிறப்பு தூதர் அந்தஸ்தில் இருந்ததால், அவருக்கு தூதருக்கு உண்டான முழு பாதுகாப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி ஷீரா சென்டிலின் தனது தீர்ப்பில் கூறினார். இது சட்டப்படியான தீர்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே (வயது 39). இவர் தனது பணிப் பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள், வாக்குமூலம் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதற்காக அவரை அமெரிக்க போலீசார் கடந்த டிசம்பர் 12–ந்தேதி நடு ரோட்டில் கைது செய்தனர்.மேலும், அவர் கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்து அவமதிக்கப்பட்டது, இந்தியாவின் கடும் கண்டனத்துக்கு வழிவகுத்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. மேலும், இரு தரப்பு ராஜ்ய ரீதியிலான உறவுகளும் பாதித்தது.
இத்தனைக்கு மத்தியிலும், தேவயானி மீது நியூயார்க் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து, அவரை நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவிட்டது. அவர் கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி நாடு திரும்பி விட்டார். டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியில் சேர்ந்து உள்ளார்.இருப்பினும் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அவர் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை நீதிபதி ஷிரா சென்ட்லின் விசாரித்தார்.
விசாரணை முடிவில், தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஷிரா சென்ட்லின் நேற்று தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் நீதிபதி,”தேவயானி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் ஆலோசகராக பணி நியமனம் செய்யப்பட்டு, அதை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஜனவரி 8–ந்தேதி மாலை 5.47 மணிக்கு அங்கீகரித்து விட்டது. எனவே அவருக்கு முழுமையான விலக்கு உரிமைகள் (சலுகைகள்) கிடைத்து விட்டன என்பதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
எனவே தூதரக ரீதியிலான விலக்கு உரிமைகள் கிடைத்து விட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தேவயானியின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அவரது ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ரத்து செய்யப்படுகின்றன. தேவயானி மீதான குற்றச்சாட்டின் பேரில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு ரத்து செய்யப்படுகிறது.”என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


