வங்கிப் பணம் பாட்டன் சொத்தா? By கதிர்

வங்கிப் பணம் பாட்டன் சொத்தா? By கதிர்

இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்பது நடக்கிற காரியமாக தெரியவில்லை. ஸ்விட்சர்லாந்து அரசுக்கு இந்திய நிதியமைச்சர் மூன்று மாதத்தில் நான்கு கடிதம் எழுதிவிட்டார். சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் அரசின் காதைப் பிடித்து திருகுவதை ஸ்விஸ் அரசும் அங்குள்ள வங்கிகளும் வேடிக்கை பார்க்கின்றன. சிதம்பரத்துக்கு பெப்பே காட்டுகின்றன. வரி ஏய்ப்பு செய்தவர்களை பற்றி தகவல் தருவதாக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்திருந்தும் இந்த பரிதாபம்.’இந்த நபர்கள் அல்லது நிறுவனங்கள் வரிகளை செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்’ என்று நமது அரசு லிஸ்ட் கொடுக்க வேண்டும். லிஸ்டில் உள்ள பெயர்களில் ஸ்விஸ் வங்கிகளில் அக்கவுன்ட் இருந்தால், அந்த விவரங்களை நமக்கு தருவார்கள். இதுதான் ஒப்பந்தம். 2010ல் கையெழுத்து ஆனது. ஆகவே 2011ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வந்தது. இப்போது இந்திய அரசு கேட்கும் விவரங்கள் அந்த ஒப்பந்தத்தின் வரம்புக்குள் வராததால் தர மாட்டோம்; அது சிதம்பர ரகசியம் மாதிரி என்கிறது ஸ்விஸ் அரசு. இதுதான் பிரச்னை.
edit money 18
ஸ்விஸ் வங்கி என்றாலே கள்ளப் பணத்தை பதுக்கும் பாதாளக் கிடங்கு என்ற சித்திரம் மக்கள் மனதில் பதிந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பணத்தை மட்டுமின்றி, அது சம்பந்தமான ரகசியங்களையும் பாதுகாக்கின்றன அந்த வங்கிகள். நம்மூர் வங்கிகளில் பணம் போட்டால் வட்டி கிடைக்கும். ஸ்விஸ் வங்கியில் வட்டி பெரிதாக வராது. பதிலாக பல சேவைகள் கிடைக்கும். உதாரணமாக, ‘இது நாய் விற்ற பணமா, உங்கள் நாட்டை விற்ற பணமா’ என்று கேட்கமாட்டார்கள். உங்கள் தொழில் முழுநேர கொள்ளையாக இருந்தாலும், பார்ட்-டைமாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். பான் நம்பர், ஆதார் கார்டு காட்டச் சொல்வதில்லை. யார் கேட்டாலும் வாடிக்கையாளர் பெயரை வெளியே சொல்லக்கூடாது என 1934ல் இருந்து சட்டமே இருக்கிறது. பணக்காரர்களுக்கு அதுதானே தேவை. ஆகவே ஸ்விஸ் வங்கியை நாடுகின்றனர். அந்த நாட்டு அரசு இதில் ஈடுபடவில்லை. தனியார் துறைதான். சின்னஞ்சிறு நாட்டில் நூற்றுக்கணக்கான வங்கிகள் திளைக்கின்றன.

அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களும் அங்குதான் பணத்தை பதுக்குகிறார்கள். அவர்களின் அக்கவுன்ட் விவரங்களை கேட்டபோதும் ஸ்விஸ் அரசு தட்டிக் கழித்தது. உலகின் நம்பர் 1 பணக்கார நாட்டுடன் மோத முடியுமா? அமெரிக்க கெடுபிடிக்கு ஸ்விஸ் வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தியாவால் மிரட்ட இயலவில்லை.

இந்திய வங்கிகளே ஸ்விஸ் வங்கி போல செயல்படும்போது, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்ற பேச்சே மக்களை ஏமாற்றும் வேலை என்பது அப்பட்டமாக தெரிகிறது. 24 பொதுத்துறை வங்கிகளில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி பட்டை நாமம் போட்ட பெரிய கம்பெனிகள், தொழிலதிபர்கள் பெயர்களை வெளியிடாமல் வங்கிகளும் அரசும் மூடி மறைத்து நிற்கின்றன. கிங்ஃபிஷர் அதிபர் விஜய் மல்லய்யா பெயர் மட்டும்தான் ஊருக்கு தெரிந்தது. விமான கம்பெனியின் நஷ்டமும், முடக்கமும் ரகசியத்தை அம்பலப்படுத்தின. 6,000 கோடி ரூபாய் கடன்காரர் அவர். ஆனாலும் கிரிக்கெட் டீம் நடத்தி ஆட்டக்காரர்களை கோடிகளில் ஏலம் எடுக்கிறார்; பந்தயக் குதிரைகளை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார். ஆடம்பரத்துக்கு பெயர்போன அவரது பழக்க வழக்கங்கள் எதுவும் தடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற மேலவையில் அவர் உறுப்பினராக இருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான கம்பெனி 350 கோடி கடன் வாங்கிவிட்டு, ஒரு தவணைகூட திருப்பி செலுத்தவில்லை. வின்சம் டயமண்ட்ஸ் (2,600 கோடி), எல்க்ட்ரோதெர்ம் (2,211 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் (1,810 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (1,732 கோடி), எஸ் குமார்ஸ் (1,692 கோடி), சூர்ய விநாயக் இண்டஸ்ட்ரீஸ் (1,446 கோடி) என்று பெயர்கூட பிரபலமாகாத 10 கம்பெனிகள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கப்பட்டு, இதுவரை பத்து பைசா திரும்ப வரவில்லை. இவர்களில் 2 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி அரசு கவுரவித்துள்ளது.

வராக்கடன் என்று வங்கிகள் குறிப்பிடும் இந்த கடன்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கும்போதே அவை திரும்பி வராது என்பது வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். என்றாலும், தங்கள் சுய லாபத்துக்காகவும், மேலிடத்து அரசியல் நிர்பந்தம் காரணமாகவும் போதுமான உத்தரவாதம் ஜாமின் எதுவும் இல்லாமல் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக ஆவணங்களை சமர்ப்பித்து அப்புறமாக மொத்த கடனையும் தள்ளுபடி செய்துவிடலாம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 2001ல் இருந்து சென்ற ஆண்டு வரையில் அவ்வாறு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தெரியுமா?
2 லட்சத்து 4,000 கோடி!

யார் வீட்டு பணம் இது? தள்ளுபடி பத்திரத்தில் கையெழுத்து போடுபவரின் தாத்தா சம்பாதித்த சொத்தல்ல. நியாய வட்டி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அரசு வங்கி ஆயிற்றே என்ற நம்பிக்கையில் மக்கள் டெபாசிட் செய்த பணம். போனமாதம் 18ம் தேதி கணக்குப்படி, இந்திய மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கும் பணம் 78 கோடியே 69ஆயிரத்து 970 கோடி ரூபாய். வங்கிகள் கடனாக கொடுத்திருப்பது 60 லட்சத்து 36 ஆயிரம் கோடி. அதில் பெரும் பகுதி மிகச் சிலரின் கைக்கு போயிருப்பதுதான் கவனிக்க வேண்டியது.

நிதியமைச்சர் ஓயாமல் எச்சரித்தாலும் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க வங்கிகள் எப்படியெல்லாம் நிபந்தனைகள் விதிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். மதிப்பு ஏறிக் கொண்டே போகிற வீடு போன்ற அசையா சொத்து அல்லது தங்க நகைகள்போன்ற அசையும் சொத்துகளை அடகு வைக்கும்போதே வங்கிகள் காட்டும் கெடுபிடிக்கு அளவில்லை.

வீட்டுக்கடனுக்கும் நகைக்கடனுக்கும் என்றே பிரத்யேகமாக தனியார் நிதி நிறுவனம் தொடங்கி தெருவுக்கு தெரு கிளைகள் ஆரம்பிக்க முடிந்ததற்கு வங்கிகளின் அலட்சியம்தானே காரணம்? இந்த ”எச்சரிக்கை உணர்வில்” 1 சத்வீதத்தை கோடிகளில் கடன் கேட்போரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது இருந்திருந்தால் இவ்வளவு தொகை ஏப்பம் விட்டிருக்க முடியாதே.

உண்மையில் என்ன நடக்கிறது? ஒரு சில லட்சங்கள் வீட்டுக் கடன் அல்லது நகைக்கடன் வாங்கி இரண்டு தவணை தவறிவிட்டால், வாங்கியவன் படம், முகவரி, ஜாமின் கொடுத்தவன் படம் எல்லாம் போட்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வங்கிகள் அவமானப் படுத்துகின்றன. கணவனும் மனைவியும் கூட்டாக பெற்ற வீட்டுக்கடன் பாக்கி இப்படி விளம்பரமாக வெளியாக, அந்த முகவரிக்கு தேடி சென்ற ஒரு பிரமுகர், ‘இத்தனை அழகான மனைவியை வைத்துக் கொண்டு கடன் தவணை கட்டாமல் இருக்கலாமா? விடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்ல, அவமானத்தில் கணவன் விஷம் குடித்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. வங்கி நிர்வாகிகளை விரோதிக்க வேண்டாமே என்று ஊடகங்கள் அத்தகைய செய்திகளை பிரசுரிப்பதில்லை.

வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பி மிரட்டும் தனியார் வங்கிகளின் அராஜகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த அணுகுமுறை. தவணை கட்ட முடியாமல் போவதற்கு நியாயமான எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். வீட்டில் யாருக்காவது உடல்நலம் கெட்டு சிகிச்சை செய்திருக்கலாம். யாரேனும் இறந்திருக்கலாம். வேலை போயிருக்கலாம். கொள்ளை நடந்திருக்கலாம். மனநிலை பாதித்திருக்கலாம். வங்கியில் சொன்னால் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. வாங்கிய கடனுக்கு ஈடாக வீடோ நகையோ அவர்கள் வசத்தில் இருந்தும்கூட இந்தக் கொடுமை நடக்கிறது. எதற்கெல்லாமோ கூச்சல் எழுப்பும் மனித உரிமை அமைப்புகள் இதனை கண்டுகொள்ளாதது ஆச்சரியம்.

மக்களின் பணத்தை பணக்காரர்களுக்கு வராக்கடனாக வழங்கும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிவிட்டு கட்டத் தவறியவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டால் அவர்களுக்கு குற்ற உணர்வு உண்டாகலாம். பணத்தை திருப்பி செலுத்த முன்வரலாம் என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே அரசுக்கு யோசனை சொல்லப்பட்டது. அரசும் ரிசர்வ் வங்கியும் கண்டுகொள்ளவே இல்லை. வாஜ்பாய் ஆட்சியில் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த யோசனையை கோர்க்கையாக அளித்தது. அவர் அரசுக்கு அனுப்பினார். பலன் இல்லை. அப்போது முதல் ஊழியர், அலுவலர் சங்கங்கள் தங்களுடைய சம்பள உயர்வு போன்ற எந்தக் கோரிக்கையோடும் இதை சேர்த்தே சமர்ப்பித்து வருகிறார்கள். அதிலும் பயனில்லை. 2001ல் 80,246 கோடியாக இருந்த வராக்கடன், 2003ல் 52,807 கோடியாகவும், 2012ல் 1.1 லட்சம் கோடியாகவும் உயர்ந்து இன்று 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

வங்கிகளை நாட்டுடமை ஆக்கியது மக்களுக்கு உதவுவதற்காக என்று சொல்லப்பட்டது. இன்று செல்வந்தர்கள் அந்த வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை சூறையாட அனுமதிக்கப்படும் நிலையை பார்க்கும்போது உள்ளம் கொதிக்கிறது. அவர்களிடம் பணத்தை வசூலிக்க அரசுக்கு துப்பில்லை என்றால், பெயர்களை அம்பலப்படுத்தி மானத்தையாவது வாங்க முன்வரவேண்டும். வங்கி ஊழியர், அலுவலர் சங்கங்கள் மற்ற கோரிக்கைகளுடன் இதை இணைக்காமல், இதற்காக மட்டுமே ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் யாருடைய பாட்டன் வீட்டு சொத்துமல்ல, இந்திய மக்களின் சொத்து. அது கொள்ளை அடிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

(இழு தள்ளு 27/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2014)

Related Posts

error: Content is protected !!