பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நடந்த நினைவஞ்சலி!
தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படுபவருமான பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் இந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சிவகுமார் பேசும் போது. ” இவ்விழாவின் மூலம் வேருக்கு மரியாதை செய்யும் விழுதுகளுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரும் தனக்கென தனியான சரித்திரம் படைத்தவர்கள். அவர்களுக்குச் சற்றும் குறையாமல் சரித்திரம் படைத்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர் கள்.அவரது தாத்தா காலத்திலேயே வசதியான குடும்பம். அவரது தாத்தா சென்னையில் நாலுகிரவுண்ட் இடத்தில் வீடு வைத்திருந்தவர். .
பிலிம் நியூஸ் ஆனந்தன் 90 வயது நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்.அவரது அஞ்சலி நிகழ்ச்சியில் துக்கமோ வருத்தமோ படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் பூரணமான வாழ்க்கை வாழ்ந்தவர்.அவர் போல வாழும் வாய்ப்பு இனி எவருக்கும் கிடைக்காது. அவர் போல வாழவும் முடியாது.
அவரது நண்பர் தேவராஜ் நடத்திய ‘பிலிம் நியூஸ்’ பத்திரிகைக்கு போட்டோகிராபராக இருந்தார். அது முதல் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்றாகி விட்டார் .முதல் படம் ‘காளிதாஸ்’ 1931 அக்டோபர் 31ல் வந்தது. அந்தப் படம் முதல் 7000 படங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்து இருந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன் . இரவு 12 மணிக்கு போன் செய்தால்கூட தகவல் தருவார், அலுக்க மாட்டார். கோபமே வராது. சாந்தசொரூபி.


என் முதல் படம் முதல் என்னைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உதவி வந்தவர். இப்போது உள்ளவர்கள் போல நான் சம்பாதிக்கவில்லை.என் 125 வது படம் வந்த போதுதான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.
அப்போது ஒவ்வொரு படத்தின் போதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உதவினார். என் 100 வது படம் வந்த போது 1979-ல் அவற்றை தயாரித்த 100 தயாரிப்பாளர்களையும் ஒரே மேடையில் அழைத்து எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நன்றி தெரிவித்து ஷீல்டு கொடுத்தேன். இந்த யோசனையைச் சொன்னவர் அவர்தான்.
1974ல் எனக்குத் திருமணம் ஆனது. இங்கிருந்து எல்லா பத்திரிகையாளர்களையும் கோயமுத்தூர் அழைத்துச் சென்று சிறப்பு செய்தவர் அவர். 1980 முதல் ப்ளஸ்டூவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறேன். இதற்குப் பின்னணியில் இருந்தது அவர்தான்.
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றெல்லாம் சொல்வதைவிட அவர் போல பல பிலிம் நியூஸ் ஆனந்தன்கள் உருவாக வேண்டும் என்று சொல்லலாம். ஏனென்றால் அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.” இவ்வாறு சிவகுமார் பேசினார் .
இந்நிகழ்வில் மேலும் பங்கேற்றுப் பேசிய
நடிகர் ராஜேஷ் :ஒரு தந்தைக்கு தனக்குப் பிறகு நல்லவை எல்லாம் தொடர்ந்து செய்யும் ஒரு மகன் தேவை . அப்படிப்பட்டவராக டைமண்ட் பாபு இருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மிக உயர்ந்த மனிதர் .அரசு செய்ய வேண்டிய பணிகளை ஒரு தனிமனிதராகச் செய்தவர்.
நடிகர் எஸ்.வி.சேகர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தன் பணியை விரும்பிச் செய்தார். விருப்பமுடன் சுமந்தால் இரும்பு கூட கரும்பு மாதிரி இருக்கும் என்று நிரூபித்தவர்.தந்தை விரும்பியதை மகன் டைமண்ட் பாபு நிறைவேற்ற வேண்டும் .மற்றவர்கள் பற்றிக் கவலைப்படக்கூடாது.
தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன்: இங்கு எல்லா தயாரிப்பாளர்களும் வந்திருக்க வேண்டும் .வராதது வருத்தம்தான். சிவாஜி முதல் சிவகார்த்திகேயன்வரை தகவல் சேகரித்து வைத்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். அவர் பெயரில் பிலிம் சேம்பரில் அருங்காட்சியகம் வைக்கவேண்டும். அங்கே அவரது சிலையையும் வைக்கவேண்டும்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி : சினிமா பற்றி எனக்குத் தெரிந்தது எல்லாம் அவர் மூலம் தெரிந்ததுதான் .இயக்குநர் சங்கத்துக்கு நாங்கள் 3 மாதம் தேடிய போது கிடைக்காத தகவல்களை அவர் ஒருவர் மட்டுமே தந்தார்.
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்: பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுடன் எழுத்தாளர் சுஜாதா அவர்களைச் சந்திக்க வைத்தோம்.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அமுதசுரபி பத்திரிகையில் வெளியிட்டோம். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவரது வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரிக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவி, மகன் பத்திரிகை தொடர்பாளர் டைமண்ட்பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.புகழஞ்சலி செலுத்துவதற்கு முன் வந்திருந்த பத்திரிகை தொடர்பாளர்கள்,பத்திரிகை ஊடகத்துறையினர் பிலிம்நியூஸ் ஆனந்தன் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர் .முன்னதாக பிரசாத் ஆர்க்கெஸ்ட்ராவின் இசையஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தது.


