பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 23–ந் தேதி முதல் மார்ச் 16–ந் தேதி வரையிலும், 2–வது கட்டமாக ஏப்ரல் 25–ந் தேதி முதல் மே 13–ந் தேதி வரையிலும் நடக்கிறது. இதில் நாளை மறுநாள் (25–ந் தேதி) ரெயில்வே பட்ஜெட்டும், 29–ந் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.
parlement feb 23
இதையடுத்து டெல்லி மேல்–சபையின் முதல் அலுவல் நாள், நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில்,எதிர்க் கட்சிகள் நேரு பல்கலைக்கழக மாணவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் புயலைக் கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரம், பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதுபற்றிய விவாதம் தேசப்பற்று கொண்டவர்கள், சேதவிரோத சக்திகள் என்பதை வெளிப்படுத்துவதாக அமையும் என்று பா.ஜனதா கருதுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று டெல்லியில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற தாங்கள் கூறிய முக்கிய 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத் தியது.சிறிய கட்சிகளின் தலைவர்கள், ‘பெரிய கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் எங்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது’ என்று குற்றம் சாட்டினர். அ.தி.மு.க., தி.மு.க. தலைவர் கள் கூட்டத்தொடரில் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

கூட்டம் முடிந்த பின்பு வெங்கையா நாயுடு நிருபர்களிடம், “அனைத்து கட்சி கூட்டம் சம்பிரதாய முறைக்காக நடத்தப்படுகிறது என்று கூறுவதை ஏற்க இயலாது. இந்த கூட்டம் மிகவும் திருப்திகரமாக அமைந்திருந்தது. பாராளு மன்றம் சுமுகமாக செயல்பட எல்லா கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன. அனைத்து பிரச்சினைகளையும் அவற்றின் தன்மையைப் பொறுத்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.ஜாட் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பிரச்சினை தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்தவை, மாணவர் வெமுலா தற் கொலை, அருணாசலபிரதேச அரசியல் நிலவரம் என்று அனைத்து பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதில் மற்ற கட்சிகளை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது.சரக்கு சேவை வரி மசோதா மற்றும் ரியல் எஸ்டேட் மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று நம்புகிறோம்” என்றார்

கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அருணாசலபிரதேச அரசியல் குழப்பம், டெல்லி நேரு பல்கலைக்கழக பிரச்சினை, ஜாட் வகுப்பினர் போராட்டம், பணவீக்கம் உள்ளிட்ட 9 பிரச்சினைகளை விவாதத்தில் எடுத்துக்கொள்ள காங்கிரஸ் வற்புறுத்தியது. மத்திய அரசும் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்’’ என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது பகுதியில் சரக்கு சேவை வரி மசோதாவை நிறைவேற்ற இயலுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த மல்லிகார்ஜூன கார்கே அது அப்போதுள்ள நிலைமையைப் பொறுத்தது என்றார்.

காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறும்போது, ‘‘தகுதி அடிப்படையில்தான் பாராளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிப்போம்’’ என்று குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே பாராளுமன்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நிரல்களை மத்திய அரசு நிர்ணயித்து இருக்கிறது. எனவே பாராளுமன்றம் இயங்காமல் போனால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு’’ என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!