பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே வாரியம் கொடுத்த பரிந்துரை ஏற்பு!
கடந்த மே 16 ஆம் தேதி மோடி அரசு பதவியேற்பதற்கு முன்னர் பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் முறையே 14.2 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டன. ஆனால் பா.ஜனதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே அமைச்சர் முடிவு செய்துகொள்ளட்டும் என்ற அடிப்படையில் அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் அளித்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இதுகுறித்த இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் விரைவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ரயில்வே பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம்,” நிதிச் சுமையில் இருந்து ரயில்வே துறையை மீட்பதற்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. பயணிகளை எவ்வகையிலும் பாதிக்காதவாறு ரயில் கட்டண உயர்வு இருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.இதனிடையே கட்டண உயர்வுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ள போதிலும், பயணிகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தப்படுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், ஆனாலும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என பிரதமர் அலுவலகத்திடம் ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் குறைந்த பட்சம் சாதாரண வகுப்பு கட்டணத்தை உயர்த்தாமல், முதல் வகுப்பு ஏ.சி. மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி. கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மோடி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனாலும் ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தும்பட்சத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணமும் ஓரளவு உயர்த்தப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


