நான் தெளிவாக இருக்கிறேன்! – ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு!
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் திறப்புவிழா மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. விழா வில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான பெயர் பலகையை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் விஜயகாந்த் பேசுகையில், “முதன் முதலில் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி விருத்தாசலம்.அடுத்த தொகுதி ரிஷிவந்தியம். இந்த 2 தொகுதி மக்களுக்கும், என் தொண்டர்களுக்கும் என்றென் றும் கடமைப்பட்டிருக்கிறேன். ரிஷிவந்தியம் தொகுதியில் என்னால் முடிந்த அளவில் அனைத்து பணிகளையும் செய்து முடித்துள்ளேன். ரூ.1வு கோடி மதிப்பில் தொகுதி மக்களுக்காக செலவு செய்துள்ளேன். இதை நினைத்து பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்றைக்கு கூட விஜயகாந்த், விழுப்புரத்துக்கு வந்தது கூட்டணி பேரத்துக்காகத்தான் என்று சொன்னார்கள். கூட்டணி பற்றி விஜயகாந்த்துக்கு என்ன தெரியும்? பேரம் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். என் கட்சி நன்றாகத்தான் இருக்கிறது. என் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டுமோ, அப்படித்தான் கொண்டு செல்கிறேன். நான் சொல்வதுதான் வேதவாக்கு.
சிலர் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள். பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவன் விஜயகாந்த் அல்ல. நான் பார்க்காத புகழ் அல்ல. பணம் அல்ல. நான் இதுவரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன். கூட்டணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் தெளிவாக, தைரியமாக இருக்கிறேன். யாருடனும் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. காசையும் வாங்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்ததும் என் தொண்டர்களையும், பத்திரிகை நண்பர் களையும் அழைத்துத்தான் கூட்டணி பற்றி சொல்வேன். எதைச்சொன்னாலும் உங்களை அழைத்து, உங்கள் முன்னால்தான் சொல்வேன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் முன்னால் சொல்கிறேன்.
மணலூர்பேட்டையில் ரூ.20 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மத்திய அரசிடம் போராடி னேன். தற்போது அந்த வேலைகள் அவசர, அவசரமாக நடந்து வருகிறது. பாலத்தை தரமானதாக கட்ட வேண்டும். இந்த பாலத்துக்காக தமிழக அரசிடம் எத்தனையோ முறை போராடியும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுத்துள்ளேன். ஆனால் அமைச்சர் மோகன், மணலூர்பேட்டையில் தான்தான் உயர்மட்ட பாலத்தை கொண்டு வந்ததாக கூறி வரு கிறார். அவருக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். அ.தி.மு.க.வை அடுத்த முறை ஆட்சிக்கு வரவிடமாட்டேன். அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் நான் செய்வேன்.

இன்றைக்கு கார்த்தி ப.சிதம்பரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தை அ.தி.மு.க.வினர் முடக்கி இருக்கிறார் கள். நாங்கள் சட்டமன்றத்தில் எதாவது கேள்வி கேட்டு முடக்கினால், எங்களை சஸ்பெண்டு செய்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு நியாயம், சட்டமன்றத்தில் ஒரு நியாயமா?. ராஜீவ் காந்தியால்தான் நீங்கள்(அ.தி.மு.க.) தான் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் இன்றைக்கு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஏன் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்?110-வது விதியின் கீழ் திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தாமல் விடுகிறீர்கள். அதுபோல 110-க்கு அடுத்து 111 ஆகும். அதாவது பட்டை நாமம் போடுகிற வேலைதான் இந்த வேலையும்.
மழைவெள்ளத்தால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் வெள்ள நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. என் வீட்டிற்கு வந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மழைவெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி கொடுத்ததாக கூறினார். ஆனால் வெள்ள நிவாரணம் எங்கே போனது? விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் அந்த நிதி செல்லவில்லை. வெள்ள சேதத்தை ஹெலிகாப்டரில் இருந்தவாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார். ஆனால் நான், நேரில் சென்று மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன் “ என்று அவர் பேசினார்.


