நான் கமலிடம் கற்றுக்கொண்ட ஒரே விஷயம்! By சாருஹாசன்

நான் கமலிடம் கற்றுக்கொண்ட ஒரே விஷயம்! By சாருஹாசன்

என் அறுபதாண்டு திருமண விழாவில் கலந்து கொண்ட ஒரு நிருபர் உலகநாயகனிடம் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம் என்ன? என்று கேட்டார். சினிமா… நடிப்பு . இயக்கம் என்று ஏதாவது கற்றுக்கொண்டிருந்தால் நானல்லவா மெகா ஸ்டார்………. கிகா ஸ்டார்….. மினி ஸ்டார் அல்லது அட் லீஸ்ட் நானோ ஸ்டார் என்றாவது பட்டம் பெற்றிருப்பேனே? “உதிரிப்பூக்கள் சாருஹாஸன்” அன்று ஆரம்பத்தில் பட்டம் கொடுத்தார்கள். உதிரிப்பூக்கள்தான் இன்னும் புகழோடு இருக்கிறது, அந்த பட்டமும் என்னிடமிருந்து நீக்கப்பட்டு இயக்குனர் மஹேந்திரவர்மனுக்கு மட்டில் சொந்தம் என்று சொல்லபடுகிறது. மஹேந்திர வர்மனிடம் நான் கற்றுக்கொண்டது ஒரு அரைகுறை சினிமா..
charuhasan
எனக்கே எதுவுமே லேட்டாகத்தான் மனதில் தோன்றும். நான் கமலிடம் கற்றுக்கொண்ட ஒரே விஷயம் உண்மையை பேசுவதும் நடந்த விஷயங்களை ஒப்புக்கொள்வதும்தான். நான் வளரும் போது என் தாய் தந்தை….. உறவினர்கள் … என் ஆசிரியர்களிடமும் கற்றுகொண்ட விஷயம் பொய் சொல்வதுதான்……….. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வக்கீல் பெருமானானேன். சமீபத்தில் ‘உண்மைகள் என்று எழுதிய கட்டுரையில் பொய் கலப்பு இருந்ததை உணர்ந்து அதைகூட முகநூல் பதிவுகளில் சேர்க்கவில்லை.

யாராவது நெஞ்சை தொட்டு உங்களுக்குள் உண்மையை சொல்லிக் கொள்ளுங்கள். கமல் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதை மற்ற எந்த நடிகரும் செய்ததில்லை என்று. உங்கள் மதத்தலைவர்களிடையே…. அவர்கள் செய்த மற்ற குற்றங்களை விசாரிக்கும்போது உடலுறவும் வெளிப்படுகிறது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளின் வன்முறை பாலுறவு முயற்சியை நாங்கள் கண்டுகொள்ளாமல் சிரித்து மழுப்பி விட்டோம்.

எல்லா உண்மையையும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை அமெரிக்க நீதிமன்ற சாட்சிமுறை சட்டத்தில் ஒரு அருமையான பகுதி….. “இந்த கேள்விக்கு நான் பதில் கூறினால் நானே குற்வாளியாகக்கூடும் என்ற காரணத்தால் பதில் கூற மறுக்கிறேன்.” என்பதை அவர்கள் நீதி முறை ஒப்புக்கொள்கிறது. I REFUSE TO ANSWER THIS QUESTION ON THE GROUND THAT THIS COULD INCRIMINATE ME.

சிந்தித்து பாருங்களேன் என்ன கருத்துள்ள கோட்பாடு? சாருஹாஸன் முகம் குரங்கைபோல் இருக்கிறது என்பதை அவசியம் வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா?

அந்தக்காலத்தில் அதாவது 40 ஆண்டுகளுக்குமுன் பல இளம் பெண்கள் என்னிடம் பேசும் போது நீஙகள் கமலஹாசன் அண்ணனா? நம்ப முடியவில்லையே? அவர் அவ்வளவு அழகாக இருக்கிறார்?” என்பார்கள்.

பாவம்…………… என் தாயின் கற்புக்கல்லவா களங்கம் ஏற்படுத்துகிறார்கள்?

ஒரு முறை நானும் சட்டைக்காரி புகழ் மோஹனும் திரைப்பட விழா விருந்தில் கையில் தட்டேந்தி குயூ வரிசையில் நின்றோம்.
ஒரு நடிகை என்னை கேட்டார் “சுஹாசினி உங்கள் மகளா? .
. நான் “ஆம்” என்றேன்
“உங்க சொந்த மகளா?” என்று மறுமுறை கேட்ட்டர்
“ அதை என் மனைவியிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றேன்.
சட்டைக்காரி மோஹன் மறந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்லவே?

S. Charu Hasan

error: Content is protected !!