நவராத்திரி கலைவிழா:தஞ்சை பெரியகோவிலில் 9 நாட்கள் நடக்கிறது!
தஞ்சை தென்னக பண்பாட்டுமையம், அரண் மனை தேவஸ்தானம் மற்றும் தென்னகப்பண்பாட்டு மைய நண்பர்கள் குழு இணைந்து தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழாவை நடத்துகிறது. இந்த கலைவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13–ந்தேதி வரை நடைபெறுகிறது.

கலைவிழாவின் முதல் நாள் பிரகன்நாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரமும், சென்னை நிரஞ்சனசீனிவாசன், பரமமேஸ்வரன் குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 6–ந்தேதி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரமும், ஐதராபாத் சிந்துஜாவின் குச்சிப்புடி நடனமும், நாகை பாலக்குமாரின் நடராஜர் நடன வித்யாலயா பள்ளி வழங்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
7–ந்தேதி அம்மனுக்கு சதஸ் அலங்காரமும், அணையடி செல்வி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், சங்கீதா சிவக்குமாரின் சங்கர நாட்டிய வித்யாலயா பள்ளி வழங்கும்பரதநாட்டிய நிகழ்ச்சியும், மலேசியாவை சேர்ந்த சியாமளசேகரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதே போல் 8ந்தேதி அம்மனுக்கு காயத்திரி அலங்காரமும், 9ந்தேதி அன்னபூரணி அலங்காரமும், 10ந்தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 11ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 12ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 12ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


