தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!!
தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி அதிக பதவிகளை பிடித்து நிர்வாகத்துக்கு வந்தது. வந்த சில மாதங்களிலேயே எஸ்.ஏ.சி.தலைமையிலான நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தவர்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கம் கோர்ட், போலீஸ் என்ற அலைந்ததில் சங்கம் செயல்படாமல் போய்விட்டது. இப்போது வருகிற 9ந் தேதி 2013-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது.
எப்போதுமே தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தால் இரு அணிகள் மோதும் சிலர் சுயேட்சையாக நிற்பார்கள். இந்த முறை இதுவரை இல்லாத புதுமையாக 3 அணிகள் மோதுகிறது. கேயார் அணி, கலைப்புலி தாணு அணிகள் நேரடியாக மோதுகிறது. இப்போது சிவசக்தி பாண்டியன் தலைமையில் மூன்றாவது அணி ஒன்றும் களத்தில் இறங்குகிறது.
கேயார் அணியில் தலைவர் பதவிக்கு கேயாரும், துணைத் தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு டி.சிவா. ஞானவேல் ராஜா ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள்.
கலைப்புலி எஸ்.தாணு அணியில் தலைவர் பதவிக்கு தாணுவும், துணைத் தலைவர் பதவிக்கு பவித்ரன், பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், சங்கிலி முருகன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமியும் போட்டியிடுகிறார்கள்.
சிவசக்தி பாண்டியன் அணியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு பட்டியல் சேகர் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு தாணுவை இவர்கள் ஆதரிப்பார்கள் என்ற தெரிகிறது.
கேயார் அணிக்கு ஆளும் கட்சி சார்புடைய சரத்குமார், ஆர்.வி. உதயகுமார் அகியோரின் ஆதரவு இருக்கிறது. கலைப்புலி தாணு அணிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், கே.பாலச்சந்தர் ஆகியோரின் ஆதரவு இருக்கிறது. சிவசக்தி பாண்டியன் அணிக்கு பின்னால் ஒரு பிரபல சேனல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது. தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நிதிபதிகள் இருவர் பணியாற்ற இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான பணம், சங்கம் மிகப்பெரிய அதிகார மையம் என்பதால்தான் இந்த தேர்தல் இத்தனை முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கிறது.
கோடங்கி