டென்ஷனை குறைக்க உதவும் டான்ஸ்!

டென்ஷனை குறைக்க உதவும் டான்ஸ்!

அமெரிக்காவில் அறிமுகமான ஸும்பா (ZUMBA) நடனம், இன்று உலகம் முழுக்க பிரபலம். ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நடனத்தை கற்று உடலை ஃபிட்டாகவும், நளினமாக வைத்திருக்கின்றனர் என்ற தகவல் வியக்க வைக்கிறது! உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் புதுமையான இந்தப் புத்துணர்ச்சி நடனம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம். டான்ஸ் ஸ்கூலில் கற்றுத்தருவதாக வந்த தகவல் நம் காதுக்குள் பாய, உடனே நாம் அங்கு ஆஜர்!
11 - health dance
ஆட வைக்கும் அதிரடி இசையும், சோம்பிக் கிடப்பவனையும் சுறுசுறுப்பாக்கும் உற்சாக நடனமுமாக, எம்.எஸ்.எம். நடனப் பள்ளியே களைக்கட்டிருந்தது. குழுவினருடன் இணைந்து பிரபல நடன இயக்குனர் நாகேந்திர பிரசாத் பாட்டுக்கேற்ப ஆடிக்கொண்டிருக்க, ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடிய, அதே ஃபிட் உடலும், இளமைத் துள்ளலும் நமக்கு பிரமிப்பைத் தந்தது. அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்த ஒவ்வொருவரின் மகிழ்ச்சி கலந்த துள்ளல் நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டது.

நாகேந்திர பிரசாத் நமக்காக ஸும்பா நடனத்தை ஆடிக்காட்டியதுடன், அதன் பலனைப் பற்றியும் குஷியாகப் பேசினார்.

”ஸும்பா… ஒரு குழு நடனம். இதுவும் ஒருவகையான உடற்பயிற்சிதான். சல்ஸா, மாம்போ, ஃபிளம்மிங்கோ, ஹிப் ஹாப், டேங்கோ… போன்ற மேற்கத்திய பாரம்பரிய நடனம் மற்றும் ஏரோபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள், இசையை இணைத்து கேளிக்கைகளைப் புகுத்தி உருவாக்கப்பட்டதுதான் ஸும்பா. இந்த நடனம், பல்வேறு ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கக்கூடியது! குறிப்பிட்டுச் சொல்லனும்னா, இதயம் வலுவடையும்! ரத்த ஓட்டம் சீராகும். உடலை வளைத்து. குதித்து ஆடும்போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும்.

மொத்தத்தில் எல்லாத் தசைகளுக்கும், மூட்டுக்களுக்கும் வேலை கொடுப்பதால் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க உதவும். நம்மைப் பற்றியும், நம் உடலைப் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த நடனம் பெரிதும் உதவுகிறது. எல்லோரும் ஒருங்கிணைந்து ஆடும்போது மனசுக்குள் உற்சாகம் பிறக்கிறது” என்கிற பிரசாத் சிறிது நேர இடைவெளிக்குப் பின் தொடர்ந்து பேசினார்.

”நடனம் ஒரு வகையில் தியானம் தான். மனதை ஒருமுகப்படுத்தும். நிம்மதியற்ற நிலையில் இருக்கும்போது நடனம் ஆட முடியாது. நடனம் ஆடும்போது என்ன ஸ்டெப் வைக்கிறோம், அடுத்து என்ன ஸ்டெப் வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நம்மை மறந்து ஆடும்போது மனதில் உள்ள சோகம், கவலை வெளியேறி நிம்மதி பிறக்கும். ஸும்பா நடனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருத்தர், ஒரு மணி நேரம் அந்த நடனம் ஆடினால், 850 முதல் 1050 கலோரி வரை எரிக்க முடியும். அதுவே, ஓரளவுக்கு நடனம் தெரிந்தவர் என்றால் குறைந்தது 450 கலோரிகள் வரையிலாவது எரிக்க முடியும்.

இந்த நடனம் ஆடும்போது உச்சி முதல், உள்ளங்கால் வரையிலும் உள்ள ஒவ்வொரு தசையும் துரிதமாகச் செயல்பட்டு நன்றாக உறுதிபடும். கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறமுடியும். சாதாரண உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் சோர்வுகூட, ஸும்பா நடனத்தில் இருக்காது. உடற்பயிற்சி செய்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், பேரானந்தத்தைத் தந்து மீண்டும் மீண்டும் ஆடத் தூண்டும்.

நான்கு வயது மழலை முதல் முதியவர்கள் வரை ஸும்பா டான்ஸ் ஆடலாம். மேலும், துடிப்பான, ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் இந்த நடனத்தைக் கற்று கொள்ளவேண்டியது அவசியம்.

அப்பாவின் ஆசைக்காக இந்த நடனப் பள்ளியை ஆரம்பித்தேன். விரைவில் இதேபோன்ற நடனப் பள்ளியை மும்பை மற்றும் மலேஷியாவில் ஆரம்பிக்க உள்ளேன். கன்னட படம் ஒன்றும் இயக்க இருக்கிறேன்” என்கிறார் நடனக் கலைஞர் நாகேந்திர பிரசாத்.

– பா.பிரவீன் குமார்

error: Content is protected !!