ஜெயலலிதா குடும்பம் வேறு,என் குடும்பம் வேறு அல்ல! – கருணாநிதி பேச்சு
”டாக்டர்களுடைய அறிவுரைப்படி நான் காலூன்றி நடக்க முடியாது. நான் சமீபத்திலே ஏறத்தாழ ஒரு சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்குப் போனபோது டெல்லியிலே நடைபெற்ற ராஜ்யசபா கூட்டத்தைக் காணலாம் என்று போயிருந்தேன். அந்த ராஜ்யசபாவில் வந்திருந்த உறுப்பினர்களில் இரண்டு பேர் வயதானவர்கள். என்னைப் போல வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு ராஜ்யசபா மண்டபத்தில் இரண்டு தனி இருக்கைகள் போடப்பட்டு, அந்த நாற்காலிகளிலே அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அதையும் பார்த்தேன். இங்கே எனக்கு இவ்வளவு உடல்நிலை நலிவு என்றாலும் கூட, அதற்காக ஒரு இருக்கை போட்டுத் தொலைப்போம் என்கின்ற எண்ணம் கூட இந்த ஆட்சியாளர்களுக்கு வரவில்லையே என்று இதையும் நினைத்துப் பார்த்தேன். இத்தனைக்கும் ஜெயலலிதா குடும்பம் வேறு, கருணாநிதியினுடைய குடும்பம் வேறு என்று அல்ல, ஜெயலலிதா கலைத்துறையிலே இருந்தபோதே நான் அவரை அறிவேன். அவரை அன்றைக்கே நான் அன்போடு விசாரித்து பாராட்டியவன். ஆனால், அதற்கு என்ன பிரதியுபகாரம் என்று கேட்டால், பிரதியுபகாரம் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த முறை என்னை ஒரு நாள் நள்ளிரவிலே கைது செய்து சிறையிலே வைத்தார் ஜெயலலிதா. அது தான் அவர்கள் எனக்கு காட்டிய நன்றி. அவர் எனக்கு செய்த பிரதியுபகாரம். ” என்று கருணாநிதி பேசினார்.

“சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் தியாகராய நகரில் கண்டனப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கருணாநிதி பேசும் போது,”ஜனநாயகத்திற்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறதே, நாங்களெல்லாம் கட்டிக் காத்த ஜனநாயகம், எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து வாழ வைத்த ஜனநாயகம், பாதுகாத்த ஜனநாயகம் இன்றைக்கு கேட்பாரற்று போய்விட்டதே, யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் ஜனநாயகத்தை சீரழிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதே என்பதை எண்ணும்பொழுதுதான் நான் உள்ளபடியே வேதனைப்படுகின்றேன். கவலைப்படுகின்றேன். எனக்குப் பிறகு ஜனநாயகத்தை சீரோடும் செழிப்போடும் காப்பாற்றக் கூடிய சிங்கங்களாக இந்த இளைஞர்கள் எல்லாம் இருக்க வேண்டுமே என்று ஆதங்கப்படுகின்றேன். ஏனென்றால், ஒரு முறை விட்டுவிட்டால், இந்த முறை தவறினால் அடுத்த முறை முடியாது ஜனநாயகத்தில் – ஜனநாயகம் இன்றைக்கு விலை போகிற பொருளாகி விட்டது. ஜனநாயகம் இன்றைக்கு விலைக்கு வாங்குகின்ற பொருளாகி விட்டது. ஜனநாயகம் இன்றைய தினம் அதிகாரிகளினுடைய காலிலே மிதிபடுகின்ற பொருளாக ஆகிவிட்டது.
இந்த ஜனநாயகத்தை தட்டி எழுப்பி, யார் யாருடைய காலடிகளிலே மிதிபட்டு இருக்கிறதோ, அந்த காலடிகளையெல்லாம் அகற்றி, அதைக் காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற என்னுடைய தம்பிமார்களுக்கும் சரி, அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை நடத்திச் செல்ல இருக்கின்ற அருமை நண்பர்களுக்கும் சரி, நான் இப்பொழுதே வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்” என்று கேட்டுக் கொண்டஃஅர்


