ஜிஎம் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் பெண்மணி
உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், வில்லியம் சி துரந்த் என்பவரால் தொடங்கப்பட்ட 106 ஆண்டு பழமையானது. இது அவ்வப்போது நிதி நெருக்கடியில் சிக்கி அமெரிக்க அரசின் தயவில் பிழைத்து வந்தாலும் தனி அந்தஸ்துடன் இன்றும் விளங்குகிறது. கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் இந்த நிறுவனமும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்தபோது அமெரிக்க அரசு 49.5பில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் பிணை எடுப்புத் தொகையாக செலுத்தி 61 சதவிகிதப் பங்குகளைப் பெற்றது.பின்னர்
இந்த வார ஆரம்பத்தில்தான் அரசு தன்னிடம் மிச்சமிருந்த அனைத்துப் பங்குகளையும் விற்றது. இந்த விற்பனையில் அமெரிக்க அரசுக்கு மொத்தம் 10 பில்லியன் டாலர் நஷ்டமே ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது நினைவிருக்கும்.

இந்நிலையில் இந்நிறுவனம் தனது அடுத்த தலைமை நிர்வாகியாக தயாரிப்பு வளர்ச்சி தலைவர் மேரி பர்ராவை முன்னிலைப் படுத்தியுள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டில் ஒரு பொறியியல் பட்டதாரியாக இந்த நிறுவனத்தில் இணைந்த மேரி மனித வளப்பிரிவின் தலைவராக இருந்தார். அதன் பின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் பிரிவின் தலைவராக அவர் பணியாற்றினார்.
இதற்கிடையில் தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக விளங்கும் டேனியல் அகர்சன் தனது மனைவயின் உடல்நலம் கருதி வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மத்தியில் தனது பதவிகளிலிருந்து ஒய்வு பெறுகின்றார்.இவர் இன்று வெளியிட்டுள்ள ஊழியர்களுக்கான அறிக்கை ஒன்றில் தங்களுடைய சாதனைகள் குறித்த திருப்தியுடன் செல்லுவதாகக் குறிப்பிட்டார்.


