ஜட்டிக்கு ‘ஜாக்கி’ன்னு பேர் வந்தது எப்படி? – ஒரு சுவாரஸ்யமான ‘உள்ளாடைக்’ கதை!
உள்ளாடைகள் உலகத்தில் ‘ஜாக்கி’ (Jockey) என்பது இன்று ஒரு பிராண்ட் பெயர் மட்டுமல்ல, அது அந்த வகை ஆடைக்கே அடையாளமாக மாறிவிட்டது. ஆனால், ஆண்களுக்கான நவீன ரக உள்ளாடைகள் (Briefs) முதன்முதலில் விற்பனைக்கு வந்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரியாக 91 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் தான் அந்த புரட்சி அரங்கேறியது.
சிகாகோவில் பிறந்த ‘ஜாக்கி’
1935-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ‘மார்ஷல் ஃபீல்ட்’ (Marshall Field) எனும் பெரிய கடையில் தான் உலகின் முதல் ‘பிரீஃப்ஸ்’ ரக உள்ளாடைகள் விற்பனைக்கு வந்தன. ‘கூப்பர்ஸ் இன்க்’ (Coopers Inc.) என்ற நிறுவனம் இதனை அறிமுகம் செய்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர் தான் “ஜாக்கி”.

பிரான்ஸ் நண்பரும் அந்த ஒரு போஸ்ட் கார்டும்!
இந்த வினோதமான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது. இந்த உள்ளாடையை வடிவமைத்த ஆர்தர் க்னீப்லர் (Arthur Kneibler), ஒருமுறை தனது நண்பர் அனுப்பிய தபால் அட்டையைப் பார்த்தார். பிரான்ஸ் நாட்டின் ரிவியரா கடற்கரையில் சுற்றுலா சென்றிருந்த அந்த நண்பர், அங்கிருந்த ஒரு நபர் மிகக்குறுகிய, உடலோடு ஒட்டிய நீச்சல் உடையை அணிந்திருந்த புகைப்படத்தை அனுப்பியிருந்தார்.
அதைப் பார்த்த க்னீப்லருக்கு, “ஏன் ஆண்களுக்கான உள்ளாடைகளையும் இப்படி வசதியாக மாற்றக்கூடாது?” என்ற எண்ணம் தோன்றியது. அதுவரை ஆண்கள் முழங்கால் வரை நீண்ட உள்ளாடைகளையே அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் ‘ஜாக்கி’ என்று பெயர் வந்தது?
குதிரை ஓட்டுபவர்களையும் விளையாட்டு வீரர்களையும் ‘ஜாக்கி’ என்று அழைப்பார்கள். அவர்கள் காயங்கள் ஏற்படாமல் இருக்க அணியும் ‘ஜாக்ஸ்டிராப்’ (Jockstrap) போன்ற அதே பாதுகாப்பையும், வசதியையும் இந்த புதிய உள்ளாடை வழங்கியதால் இதற்கு ‘ஜாக்கி’ எனப் பெயரிடப்பட்டது.
மின்னல் வேக விற்பனை
அறிமுகம் செய்யப்பட்ட போது, சிகாகோவில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அப்படியிருந்தும், விளம்பரத்தைப் பார்த்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். விளைவு, மூன்றே மாதங்களில் 30,000 ஜோடி உள்ளாடைகள் விற்றுத் தீர்ந்தன.
காலமாற்றம்: ‘டைட்டி-வைட்டிஸ்’ (Tighty-whiteys)
காலப்போக்கில் இந்த வகை உள்ளாடைகள் உலகெங்கும் பிரபலமாயின. இன்று “ஜாக்கி” என்பது பொதுவான பெயராகிவிட்டது. குறிப்பாக, வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டி இருக்கும் பாரம்பரிய பிரீஃப்களை மேற்கத்திய நாடுகளில் செல்லமாக ‘டைட்டி-வைட்டிஸ்’ (Tighty-whiteys) என்று அழைக்கிறார்கள்.
ஆடை நாகரிகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இந்த ‘ஜாக்கி’ பிறந்த தினம் இன்று!
விக்கி


