வசந்தத்தின் நந்தவனங்கள்: தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஒரு சிறப்புப் பார்வை!
ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ( National Girl Child Day ) ஆக கொண்டாடப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு இதே நாளில், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி அவர்கள் பதவி ஏற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் இந்நாள் உருவாக்கப்பட்டது.
வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நாளாக இது அமைகிறது.
பெண் குழந்தைகளின் முக்கியத்துவமும் சமூகப் பார்வையும்
பெண் குழந்தை என்பவள் ஒரு வீட்டின் அர்த்தம் மட்டுமல்ல, அந்த வீட்டை நந்தவனமாக மாற்றும் ஆளுமை. “முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் அந்த வீடு இறை ஆற்றலால் நிறைந்திருக்கும்” என்பது மூத்தோரின் வாக்கு. முரட்டுத்தனமான மனிதர்களைக் கூடத் தன் மென்மையான அன்பால் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் பெண் குழந்தைகள். அவர்கள் இருக்கும் வீடு ஒரு சிறு கோயிலுக்கு ஒப்பானது.

சமூக அவலங்களும் சவால்களும்
இத்தனை சிறப்புகள் இருந்தபோதிலும், இன்றும் பெண் குழந்தைகள் பல்வேறு கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்:
-
பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு: அறிவியல் வளர்ந்த போதிலும், ஆங்காங்கே இன்றும் மறைமுகமாக நடக்கும் இந்த அவலங்கள் களையப்பட வேண்டும்.
-
குழந்தைத் திருமணங்கள்: தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் பதிவாகின்றன. சுமார் 24% பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
கல்வி மற்றும் உரிமை மறுப்பு: திருமணத்தின் பெயரால் கல்வி தடுக்கப்படுவதுடன், மிகச்சிறிய வயதிலேயே மகப்பேறு, சத்துணவின்மை மற்றும் கணவனைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
உடல்நலன் மற்றும் விழிப்புணர்வு
வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகள் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சனைகள் அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கின்றன:
-
உணவுப் பழக்கம்: ‘ஜங்க் ஃபுட்’ கலாச்சாரம் மற்றும் உடல் எடையைக் குறைக்க உணவு தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் இரும்புச்சத்துக் குறைபாட்டை (Anemia) ஏற்படுத்துகின்றன.
-
சுகாதாரம்: பருவம் அடையும் காலத்தில் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாதது மற்றும் சத்தான உணவின்மை, பின்னாளில் அவர்கள் கருவுறும் காலத்தில் சிக்கல்களை உண்டாக்குகின்றன.
முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தைகள் உரிமை மறுக்கப்பட்டது, பெண் சிசுவை கொலை செய்வது போன்ற செயல்கள் அரங்கேறின. இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறினால், அது நம் அறியாமையை காண்பிக்கும்.நாம் மேற்கூறிய வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட நம் தேசத்தில், ஒரு இடத்தில் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமைக்கு ஒரு பெண் குழந்தை ஆளாகி இருக்கும். இன்னும் நம் சமூகம் பெண் குழந்தைகள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு தீங்குகளை விளைவித்துக்கொண்டு தான் இருக்கிறது.
பெண் பிள்ளை பிறந்தால் வீட்டுக்கு லக்ஷ்மி வந்ததாக அர்த்தம், பெண் குழந்தைகளே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டு வரும் தேவதைகள் என்று அவர்களை போற்றிப் பாடும் துதியை முதலில் நிறுத்துவோம். ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமாக நடத்துவதில் தான் நம் தேசத்தின் சமநிலை இருக்கிறது. அதையே பெண் குழந்தைகள் தினமும் நமக்கு எடுத்துரைக்கிறது.
நாம் செய்ய வேண்டியவை
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்துவது சமூகத்தின் கடமையாகும். அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அல்லது பாகுபாடுகள் நிகழும்போது சட்டத்தை அணுகத் தயங்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான கல்வி, சமவாய்ப்பு மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதே இந்தத் தினத்தின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
தனுஜா


