சாந்தன் = சானாவுல்லா?முருகன்,சாந்தன் பேரறிவாளன் உயிருக்கு ஆபத்து…?:தமிழக அரசு கலைப்பு?By டி.வி.எஸ்
கடந்த 22.02.14 சனிக்கிழமை அன்று வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் நடந்த நளினி – முருகன் சந்திப்பு பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இத்தனைக்கும் வழக்கமான சந்திப்புதான் அது.ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இங்கு அடைக்கப்பட்டிருக்கும் நளினியை அவரது கணவரும் இன்னொரு குற்றவாளியாக சொல்லப்படுபவருமான முருகன், 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அப்படிப்பட்ட சந்திப்புதான் இது….
“ஆனால், வழக்கம்போல இல்லை!” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்:

“இதுபோன்ற சந்திப்புகளில், நளினி, முகம் வாடியே இருப்பார். வழக்கின் நிலை, மகளைப் பிரிந்திருப்பது, கணவன் முருகன் முன் ஆடிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிறு… இப்படியே சோகமாக தொடரும் அவரது பேச்சு. அவருக்கு முருகன் ஆறுதல் சொல்வார். சிறையில் நடந்த சிறு விசயங்களை நகைச்சுவையாகச் சொல்வார், நிச்சயம் நாம் விடுதலை ஆகிவிடுவோம் என்று நம்பிக்கையை விதைப்பார்.ஆனால் அன்று, நளினியைப் பார்த்ததுமே, கதறி அழுதிருக்கிறார் முருகன். இதனால் அதிர்ச்சி அடைந்த நளியும் அழுதிருக்கிறார். “எப்போதுமே நீங்கள்தான் ஆறுதல் சொல்வீர்கள். இன்று நீங்களே அழுகிறீர்களே…” என்று நளினி கேட்க.. “தூக்குக் கயிறு கண்முன் ஆடிக்கொண்டிருந்தபோதுகூட, ஒரு புள்ளியாக விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தூக்குக்கயிறு அறுபட்ட நிலையில்… கொல்லப்படுவோம் என்கிற பயம் வந்துவிட்டது!” என்று சொல்லியிருக்கிறார்!” என்றார்கள் நம்மிடம் பேசிய மனித உரிமை ஆர்வலர்கள்.
நாம், “உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடை விரைவில் விலகும்! குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை ஆவார்கள்!” என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கும் நேரத்தில் இப்படி….” என்று அதிர்ச்சியுடன் நாம் இழுக்க…
அவர்களே தொடர்ந்தார்கள்: “இவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிடுவார்களோ என்கிற சிலரது அச்சமே சிறைவாசிகளுக்கு ஆபத்தாகிவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற அவர்கள் விரிவாகவே பேச ஆரம்பித்தார்கள்:
தமிழக மக்களின் எந்த ஒரு நியாயமான உணர்வும் அண்டை மாநிலங்களால் குறிப்பாக வட இந்திய மாநிலங்களால் புரிந்துகொள்ளப்பட்டதே இல்லை. இதன் வெளிப்பாடுதான் காவிரி, முல்லைப்பெரியாறு, கூடங்குளம், மீனவர்கள் கொலை… என்று எந்த ஒரு பிரச்சினையிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு உள்ள நியாயமான உரிமையைப் பெற்றுத்தர முனைந்ததில்லை.ஆனால் தமிழகத்திலிருந்து பெறப்படும் நெய்வேலி மின்சாரம், காவிரிப் படுகையிலிருந்து உறிந்து எடுக்கப்படும் பெட்ரோலியம் எல்லாவற்றையும் பந்திவைத்துவிடுவார்கள்.
இதேபோலத்தான் ஈழத்தமிழனின் சோகத்தை அவனது நியாயத்தை தமிழகம் தவிர வேறு மாநிலத்தவர் எவரும் புரிந்துகொள்ளவில்லை. மத்திய்ச் காங்கிரஸ் அரசு மட்டுமல்ல.. அகில இந்தியகட்சிகள் எதுவும் புரிந்துகொள்ளவில்லை. இதேபோலத்தான் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் நியாயமான உணர்வுகளையும், தமிழகம் தவிர எந்த மாநிலத்தவரும், குறிப்பாக வடமாநிலத்தவர் புரிந்துகொள்ளவே இல்லை.
“அந்த மூவரையும் தூக்கிலே போட வேண்டும்!” என உரத்துச் சொல்கிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல். வருங்காலப் பிரதமர் என காங்கிரசால் முன்னிறுத்தப்படும் ராகுல்காந்தியும், “பிரதமரை கொன்றவர்களுக்கு விடுதலை அளித்தால் சாமானியன் நிலை என்ன” என்றார். சாமானியர்கள் பற்றி இவரது தந்தை என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார் என்பதற்கு, ஒரு உதாரணம் சொல்லலாம். இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 8000 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள், பலநூறு பேர் பலாத்தாரப்படுத்தப்பட்டார்கள். இதுபற்றி ராஜிவ், “பெரிய ஆலமரம் விழுந்தால் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்” என்றார் மிகச் சாதாரணமாக. “தூக்குத்தண்டனையை நான் விரும்பவில்லை” என சாந்த முகத்துடன் சொல்லும் சோனியாதான் ஈழத்துப் பச்சைப்படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்தார்.அவர்களின் குரலையே இங்கிருக்கும் காங்கிரசாரும் எதிரொலிக்கிறார்கள். “சாகும்வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்!” என்று மணிசங்கர் அய்யர் சொன்னதன் அர்த்தத்தை ஆழ்ந்து நோக்கினால் விபரீதம் புரியம். அதற்கு ஏற்றாற்போல், “மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தீவிரவாதியாக மாறுவோம்!” என்று வெளிப்படையாகவே சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!” என்றார்கள்.
“சரி, பாதுகாப்பு மிக்க சிறையில் அந்த மூவருக்கும் ஆபத்தை ஏற்படுத்த எப்படி முடியும்..” என்றோம் அதிர்ச்சி விலகாமல். .
“சிறை மிகப் பாதுகாப்பானதுதான்… ஆனால் சிறையில் எல்லாமும் கிடைக்கும் நிலைதானே நிலவுகிறது. சிறையிலேயே கலவரம் நடந்து கொலை அரங்கேறியதும் தமிழகத்தில்தானே நடந்தது?தட்டவேண்டிய முறையில் தட்டினால் திறக்கும் பலவீனமான கதவுகள்தானே சிறைகளைப் பாதுகாக்கிறது? வேலூர் பெண்கள் மத்திய சிறைக்குச் சென்று நளினியைச் சந்தித்தாரே ப்ரியங்கா காந்தி. சிறை அதிகாரி அறையில் நடந்த அந்த சந்திப்பின்போது, “ப்ரியங்கா என்னிடம் மிரட்டும் தொணியில் கேள்வி மேல் கேள்வி கேட்டார். பயந்துகொண்டே பதில் சொன்னேன் என்று பிற்பாடு நளினி சொல்லவில்லையா… “சட்டத்துக்குப் புறம்பான செயல் இது” என்று சட்டவல்லுநர்களும் கண்டித்தார்களே…!” என்கிறார்கள்.
“ஒருவேளை அப்படி நடந்தால் அது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்துமே!” என்றோம்.
“ தில்லியில் பலாத்காம் செய்து கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில், குற்றம்சாட்டப்பட்டஆறுபேரில் ஒருவரான தரம்சிங், தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவிக்கவில்லையா…அதுவும் உச்சுகட்ட பாதுகாப்பு இருக்கும் திகார் சிறையில்!
தரம்சிங் குற்றம் செய்தார். ஆனால் இந்த மூவரின் மீது அப்படிச் சொல்ல முடியாதுதான். ஆனால் அவர்களை கடும் குற்றவாளிகள் என்றுதானே தமிழகம் தவிர பிறமாநில மக்கள் நினைக்கிறார்கள்.. நினைக்கும்படி செய்கிறார்கள்!” என்றவர்கள், அடுத்து சொன்னது அடுத்த குண்டு!
“23 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித்சிங் என்பவர், அங்குதாக்கப்பட்டு பிணமாகத்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.நினைவிருக்கிறதா.. பதிலுக்கு காஷ்மீரின் கோட் பால்வால் சிறையில்பாகிஸ்தானியர் சானாவுல்லா ரஞ்சய் என்னும் கைதி தாக்கப்பட்டுகொல்லப்பட்டார். சக கைதி தாக்கியதாக அரசு சொன்னது.
ஐம்பது ப்ளஸ்களில் இருந்த சானாவுல்லா, பாகிஸ்தானின் சியால்கோட்பகுதியைச் சேர்ந்தவர். 1999-ல் காஷ்மீர் பகுதியில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். சிறையில் பைப் பேக் இசைக் கலைஞராக இருந்த அவர், புல்லாங்குழல் இசைப்பதிலும் வல்லவர். மற்ற நேரங்களில் குழந்தைபோல பட்டம் விடுவார். சிறைவாசிகளுக்கு மட்டுமின்றி, சிறை அதிகாரிகளுக்கும்கூட மிகப்பிடித்தமானவராக இருந்தார்.
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கிக் கொல்லப்ட்டதற்கு பதிலடியாக இங்கே சானாவுல்லா கொல்லப்பட்டார். சிறைக்கைதிகள் இருவர் சேர்ந்து செங்கற்களால் தாக்கிவிட்டார்கள். பலத்த காயம்பட்ட சானாவுல்லா மரணமடைந்தார் என்றது மத்திய அரசு!” – அவர்கள் சொல்வதைக் கேட்க கேட்க அடிவயிற்றைக் கலக்கியது.
அவர்களே தொடர்ந்தார்கள்: “மூவருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதுகிறோம். அதிலும் சாந்தனுக்கு கூடுதல் ஆபத்து உண்டு. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதை மூவரும் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் சாந்தனுக்கு விசாரணை முறைகேடுகள் பற்றி கூடுதல் தகவல் தெரியும் என்பதால் அவருக்குத்தான் அதிகமான ஆபத்து இருக்கும் என்பது எங்கள் கணிப்பு!” என்றார்கள்.
“இப்படி ஒரு கொடுரம் நடந்தால்..யாருக்கு என்ன பலன்?” என்றோம்.
“இது கொடூரம் என்று தமிழகத்தில் மட்டுமே பார்க்கப்படும். மற்ற மாநிலங்களில் “சரியான தீர்ப்பு” (!) என்பதே மக்களின் மனநிலையாக இருக்கும். இது காங்கிரஸ் அரசு மீது ஹீரோ இமேஜ் ஏற்பட வழிவகுக்கும். ஊழல்,முறைகேடுகளால் முற்றிலுமாக பலமிழந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருக்கும்.
தவிர காங்கிரஸ் கட்சிக்கு இன்னொரு பலனும் உண்டு. அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில், தமிழகத்தில் மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். இதையே காரணம் சொல்லி, தமிழக அரசை கலைத்துவிடலாம். வரும் பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தலை நடத்தாமல், தள்ளிவத்து நடத்தலாம். இங்கும் காங்கிரஸூக்கு எதிரான மனநிலை மங்கலாம்!” என்றவர்கள்,
“அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தால் மேலும் பலருக்கும் பலன் உண்டு. ராஜீவ் கொலை விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதை, அதன் பிறகு சிறைவாசிகளோ, அவர்களின் வழக்குகளுக்கு உதவுபவர்களோ சொல்ல மாட்டார்கள். இது விசாரணை அதிகாரிகளுக்கும், “ராஜீவ் கொலையில் தொடர்புள்ள பலர் வெளியில் இருக்கிறார்கள்” என்கிறார்கள் அல்லவா… அவர்களுக்கும் நிம்மதிதானே!” என்றார்கள்.
“பலம் வாய்ந்த மத்திய உளவுத்துறைகள் இது குறித்து மோப்பம் பிடித்திருக்காதா?” என்றோம்.
“தெரியாமல் இருக்கும் என்பதை நம்புவதற்கில்லை. அதே நேரம், “மத்திய மாநில அரசுகளுக்குள் பிரச்சினையை சில அதிகாரிகள் ஏற்படுத்துகிறார்கள்” என்று முதல்வராக இருந்த கருணாநிதியும், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க மத்திய உளவுத்துறை சதி செய்கிறது” என்று முந்தைய ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.
“எல்லாம் இருக்கட்டும்… உலக நாடுகள்.. மனித உரிமை அமைப்புகள்.. மத்திய அரசை குற்றம் சொல்லாதா?” என்றோம்.
“சம்பவத்துக்குப் பிறகு விசாரணை கமிசன் போட்டால் போயிற்று என்றுதான் நினைப்பார்கள். தவிர இப்போது மட்டும் இந்திய அரசை மனித உரிமைகள் விசயத்தில் உலக நாடுகள் பாராட்டிக்கொண்டா இருக்கின்றன” என்றார்கள்.
இந்த சூழ்நிலையில், மூவர் உட்பட ராஜீவ் வழக்கில் சிறைப்பட்டிருக்கும் எழுவருக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நீதி வெல்லுமா…கொல்லுமா என்பதுதான் இப்போதைய உயிர்க்கேள்வி!
டிவிஎஸ்.


