கெத்து தொடரும் கேளிக்கை வரி விவகாரம்! –

கெத்து  தொடரும் கேளிக்கை வரி விவகாரம்! –

நடிகர் உதயநிதி நடித்துள்ள “கெத்து திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
getthu
இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், “ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ சார்பில் அதன் மேலாளர் எஸ்.சரவணமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எங்களது நிறுவனம் சார்பில், ஜனவரி 14-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த, “கெத்து’ திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பித்தோம். ஆனால், “கெத்து’ என்பது தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளனர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, “கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, “கெத்து’ என்ற வார்த்தை தமிழ் அகராதியில் இடம் பெற்றுள்ளது. எனவே, தமிழக அரசு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், “கெத்து’ திரைப்படத்துக்கு படம் வெளியான நாள் முதல் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி கள் வெ. ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அதுவரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.