கிலியைக் கொடுக்கும் ஒலி மாசு!
சமீப காலமாக சென்னையில் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வாகனங்களின் ஒலி மாசு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடம் கவலையையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும்தன்மை போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

சென்னையில் சுமார் 37.6 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில், 30,52,233 இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. தினமும் சுமார் 800 வாகனங்கள் சென்னையில் விற்பனையாகிறது. சென்னையில் கூலி வேலைக்கு செல்வோருக்கும் இரு சக்கர வாகனங்கள் இன்றிமையாத தேவையாக மாறி வருகிறது. அதேநேரத்தில் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்றவாறு, அரசு பொதுத்துறை போக்குவரத்து சேவையை பலப்படுத்தாததன் விளைவாகவும் வாகனங்களின் பெருக்கம் தடுக்க முடியாததாக உள்ளது.
இக்காரணங்களால் போக்குவரத்து நெரிசல்,சுற்றுச்சூழல் மாசு ஆகியவை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள நிலையில், வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகளை கடுமையாக்கமலேயே உள்ளனர்.
பொதுவாக வாகனங்களின் ஒலிப்பான்களில் இருந்து வரும் ஒலியின் அளவு 91 டெசிபலை தாண்டக் கூடாது என மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் கூறுகிறது. இதில் இரு சக்கர வாகனங்களில் இருந்து வரும் ஒலியின் அளவு 82 டெசிபலை தாண்டக் கூடாது. பொதுவாக 75 டெசிபல் தாண்டி ஒலியை, ஒருவர் உணரும்பட்சத்தில் அவருக்கு தலைவலி,சோர்வு,தலைசுற்றல் போன்றவை ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுவரை நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம்’ என்று முன்பு கருதப்பட்ட மும்பை இப்போது மாறியிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக அங்கு கடைப்பிடிக்கப்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகள் தினசரி ஒலி அளவை மட்டுமின்றி, இரைச்சல் மிகுந்த கணேஷ் சதுர்த்தி, தாண்டியா என்ற கோலாட்ட விழா ஆகியவற்றின் சத்த அளவுகளையும் குறைத்திருக்கிறது.மும்பையின் ஒலி மாசு கட்டுப்பாட்டு நெறி முறைகளுக்கு உந்துசக்தியாக விளங்கு வது Awaaz Foundation என்ற தன்னார்வு அமைப்பு. சுமைரா அப்துல் அலி 2006இல் தொடங்கிய இந்த அமைப்பு, மும்பையின் ஒலி மாசை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
ஆனால் சென்னையில் உள்ள 50 சதவீத வாகனங்களில் 75 டெசிபலைத் தாண்டி ஒலிப்பான்கள் ஒலிப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களேயே அதிகமாக ஒலி மாசுவை ஏற்படுத்துவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த வாகனங்கள் 100 டெசிபலுக்கு மேல் ஒலியை எழுப்புவதால் பொதுமக்களுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்படுவதும் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
12 ஆயிரம் வழக்கு: சென்னையை பொறுத்தவரையில் ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு 3,142 இரு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 10,099 வழக்குகள் ஒலி மாசு ஏற்படுத்தியதாக டிரைவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் . இந்தாண்டு இதுவரை 12,727 டிரைவர்கள் மீது ஒலி மாசு ஏற்படுத்தியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் ஒலி மாசு குறைந்ததாக தெரியவில்லை என போக்குவரத்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆண்டுக்கு, ஆண்டு வாகனங்களின் ஒலி மாசு குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்தே வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் ஒலி மாசு தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்களிடமும் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடமும் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மேலும், அதிக ஒலிகளை எழுப்பும் வாகன டிரைவர்கள மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுபோல, மாசு கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி அதிகளவு டெசிபல் ஒலியை எழுப்பும் ஒலிப்பான்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இப் பிரச்னைக்கு, காவல்துறை,போக்குவரத்துறை,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
படம் : கேசவ்


