காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதல் பிரிவில்,வேலூர் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்;
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் போட்டிகளில் பழு தூக்கும் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.இந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிதான் சதீஷ்குமார் சிவலிங்கம் பங்கேற்கும் முதல் காமன்வெல்த் போட்டி என்பதும் முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்றிருப்பது மட்டுமின்றி, ஸ்னாட்ச் பிரிவில் ஒரே முயற்சியில் 149 கிலோ எடை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையும் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். அதேபோல் ரவி கட்லு 142 மற்றும் 175 கிலோ எடைகளை தூக்கி வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ஜ் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 202 எடையைத் தூக்கி பூனம் யாதவ் வெண்கலம் வென்றார். இந்தப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நைஜீரிய வீராங்கனைகளான ஏடென்ஸ்மி தங்கப் பதக்கத்தை வென்றார்.இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி ஒன்பதாவது பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணி இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 26 தங்கம், 21 வெள்ளி 26 வெண்கலம் என 73 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.


