காங்கிரஸில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில், ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்துகொண்டது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராகுல் மீதான கட்சியினரின் விமர்சனம் மற்றும் சோனியாவின் உடல்நலக்குறைவு போன்றவை காரணமாக,இனிவரும் நாட்களில் பிரியங்கா காந்தி தீவிரமாக களம் இறங்கி கட்சி பணியாற்றுவதோடு, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கும் தலைமை ஏற்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம், வருகிற 17 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் தீவிரமாகி வரும் நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேரா இன்று திடீரென கூட்டினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் திவிவேதி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே ஏற்படுத்தி உள்ள தாக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


