செய்தியைக் கேட்க / Listen to News
கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.
1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.
டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.
alt1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.
1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய அரசு.
இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வைக்கும் முழக்கம், கச்சத்தீவை மீட்டேத் தீர வேண்டும் என்பதுதான். அதுவும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு கச்சத் தீவை வழங்கினார். அந்த முடி வானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்துக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வில்லை. ஆகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்றும் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால் அப்படித் திரும்பப் பெறுவதால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு துளியளவும் தீர்வு ஏற்படாது என்கிறார் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பாக் வளைகுடா மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித் திருக்கும் ஜோ டி குரூஸ், கச்சத்தீவைத் திரும்பப் பெற்றால், சர்வதேச எல்லையை திருத்தி வரையறுக்க வேண்டிய நிலைமைக்கு இந்தியா தள்ளப்படும் என்கிறார். அப்படி வரையறுக்கும் பட்சத்தில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவைத் தாண்டி செல்ல முடியாது என்று வாதிடுகிறார். இப்போது கச்சத் தீவில் இருந்து 35 கடல் மைல்கள் (நாட்டிகல்) தூரம் வரைக்கும் தமிழக மீனவர்கள் பயணம் செய்து மீன் பிடித்து வருகி றார்கள். அதேநேரத்தில், 1976-ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன் பாட்டில் ஏற்பட்ட திருத்தம், சட்டப்படி எந்த அந்தஸ்தையும் பெறவில்லை யென்றும், முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு சாதகமான உடன்பாடு என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை இன்று மீனவர்கள் சந்திக்கும் மிகப் பெரியப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வணிக ரீதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட டிராலர்கள்தான் (இழுவை மடிகள்).
பவளப்பாறைகளை உடைத் தெறிந்து, மீன்களின் வாழ்விடத் தையும், இனப்பெருக்கம் செய்யும் இடங்களையும் அழித்தொழித் திருக்கும் இந்த டிராலர்களால்தான் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
“இரண்டு நாட்களுக்கு முன்பு கூட புனித அந்தோணியார் திருவிழாவுக்காக கச்சத்தீவுக்கு சென்றிருந் தேன். அங்கிருக்கும் இலங்கை மீனவர்கள் சொல்வதெல்லாம் தமிழக மீனவர்கள் தாராளமாக மீன் பிடிக்க வரலாம். ஆனால் டிராலர்கள் தான் எங்கள் மார்பை உடைக்கின்றன என்கிறார்கள்” என விளக்கினார் ஜோ டி குரூஸ்.
பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக்கும்போது மீன்களுக்கு தக்கப்படி வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் முழு வளர்ச்சியடையாத மீன்களும் குஞ்சுகளும் தப்பிச் சென்று விடும். அத்துடன் வலைகள் கடலின் அடிமட்டம் வரை விரிக் கப்படாததால் ஒட்டுமொத்தமாக அரித்து எடுக்கப்படும் நிலைமை ஏற்படுவதில்லை.
பாக் வளைகுடா பகுதியை பாரம்பரிய மீன்பிடிப்புக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்தும் குரூஸ், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி சில முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும், எரிபொருளுக்கு வரி விதிக்கக் கூடாது, மீன்களை கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், மீன்பிடி படகுகள் வந்துசெல்வதற்கு வசதியாக பாம்பன் பாலத்தை நவீனப்படுத்த வேண்டும், மன்னார் வளைகுடாவில் மூக்கையூரை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆழ்கடல் மீன் பூங்காவும் நாகப்பட்டினத்தை ஆதாரமாகக் கொண்டு மற்றொரு பூங்காவும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அவரது பரிந்துரைகளில் அடங்கும்.
ஆக மீனவர்களின் பிரச்சினைக் கான தீர்வு என்பது கச்சத்தீவை மீட்பது என்ற மாயையில் இல்லாமல், அதைத் தாண்டி பாரம்பரிய மீன்பிடித்தல் என்ற உரிமையில் உள்ளது. மீன்பிடித்தல் தொடர்பாக இதுவரை நாம் பின்பற்றி வரும் சட்டங்கள் அனைத்தையுமே பாரம் பரிய மீனவர்களோடு கலந்தா லோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது என்கிறார் குரூஸ்.
