எதிர்க்கட்சி தலைவர் பதவி அவசியமா? By கதிர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி அவசியமா? By  கதிர்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை எங்களுக்கு தந்தாக வேண்டும் என்று காங்கிரஸ் மல்லுக்கு நிற்கிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் பதவிக்காக வரிந்து கட்டுவது அநியாயம் என்று பிஜேபி தள்ளிவிடுகிறது. இவர்களின் சண்டை தேர்தலோடு முடிந்தது என்று நினைத்த மக்கள் இதென்ன கூத்து என்று வியப்புடன் வேடிக்கை பார்க்கிறார்கள்.நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி உண்டு. ஆளும் கட்சிக்கு அடுத்த படியாக அதிக எம்.பி.க்களை பெற்றுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக முன்வரிசையில் உட்காருவார். இதுவரை பிரச்னை இல்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்று சட்டப்படி அங்கீகாரம் பெற சில விதிமுறைகள் இருக்கின்றன. சபையின் மொத்த பலம் என்னவோ, அதில் 10 சதவீதமாவது அந்த கட்சிக்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
Sonia-Gandhi-1
மக்களவையின் பலம் 543. அதில் பத்து சதவீதம் 55. அத்தனை எம்.பி.க்கள் கொண்ட எதிர்க்கட்சி எதுவும் இல்லை. இருப்பதில் பெரிய எதிர்க்கட்சி காங்கிரஸ். அதன் உறுப்பினர்கள் 44. ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடையாது என்று பிஜேபி சொல்கிறது. அங்கீகாரம் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தலைவர்தான் எதிர்க்கட்சி தலைவர். ஆனால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவர் அல்ல என்பதால் அவருக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்காது. அந்த அந்தஸ்துக்கு உரிய சம்பளம், சலுகைகள், உரிமைகள் கிடைக்காது.

‘ஆளும் கட்சிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறோம். அந்த தகுதி போதும். எதிர்க்கட்சி தலைவர் என அங்கீகரிக்க வேண்டும். 55 இல்லை என்று காரணம் சொல்வது எங்கள் ஜனநாயக உரிமையை மறுக்கும் குற்றம்’ என்று காங்கிரஸ் வாதிடுகிறது. ’அப்படியே இருந்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில்தான் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்த அணியின் பலம் 60. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐ.மு.கூ அணியின் தலைமை கட்சியான எங்களுக்கு தர வேண்டும்’ என்று கேட்கிறது.

இந்த பிரச்னையில் சட்டம் என்ன சொல்கிறது என்று அட்டர்னி ஜெனரலிடம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை கேட்டார். ‘கூட்டணி பார்த்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. நேரு காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. ராஜீவ் காந்தி ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லை. எனவே, 55 உறுப்பினர்கள் இருந்தால் தவிர அந்த அங்கீகாரத்தை வழங்க இயலாது’ என்று முகுல் ரஸ்தோகி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

அவர் கூறியதில் டெக்னிகலாக எந்த தவறும் இல்லை. 1952 தேர்தலில் காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிஅமைத்தது. மக்களவை முன்னவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். ஆளும் கட்சியின் தலைவராக ஒருவர் செயல்படும் வேளையில், எதிர்க்கட்சிகளின் தலைவராக ஒருவர் செயல்படுவதுதானே தர்மம். அந்த அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஏ.கே.கோபாலன் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். எனினும், அவரது கட்சி பெற்றிருந்த இடங்கள் 16 மட்டுமே. அந்த நிலையில்தான் அன்றைய சபாநாயகர் மாவ்லாங்கர் ஒரு விதியை உருவாக்கினார். சபையின் மொத்த எண்ணிக்கையில் பத்துசதவீதமாவது இருந்தால்தான் அங்கீகரிக்கப்பட்டஎதிர்க்கட்சியாக அது மதிக்கப்படும் என்றார்.

நேரு இருந்தவரை அது நடக்கவில்லை. 1957ல் காங்கிரஸ் 402 இடங்களை வென்றபோது, கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் 29 ஆக மட்டுமே உயர்ந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை. சிபிஎம் பிறந்து கோபாலன் அதில் இணைந்தார். ஐந்துமுறை மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை அவர் எட்டவே இல்லை. அந்த அதிர்ஷ்டம் ராம் சுபக் சிங்கிற்கு கிடைத்தது. 1967 தேர்தலில் 303 இடங்களை பிடித்திருந்தது காங்கிரஸ். ஆனால் கட்சிக்குள் பிரச்னைகள் முற்றி, இந்திரா காந்தியை நிஜலிங்கப்பா வெளியேற்றியபோது, கட்சி உடைந்தது. காங்கிரஸ் ‘ஓ’ என்ற பெயரில் பிரிந்த பழைய தலைகளின் பக்கம் 83 எம்.பி.க்கள் சாய்ந்தார்கள். எனவே, பத்து சதவீத எம்.பி.க்களுக்கு மேல் பெற்றிருந்த அக்கட்சியின் ராம்சுபக் சிங் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அப்போது சுதந்திரா கட்சியில் 45 எம்.பி.க்கள் இருந்தார்கள்.

பின்னர் ஜனதா ஆட்சியில் காங்கிரசின் ஒய்.பி.சவானும், இந்திரா ஆட்சியில் ஜனதாவின் ஜெகஜீவன் ராமும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை அலங்கரித்தனர். ஜனதா கட்சி ஆட்சியில்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சட்ட அந்தஸ்து அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஊதியம் மற்றும் சலுகைகள் சட்டம் 1977 அப்போது இயற்றப்பட்டது. எனினும், அடுத்து வந்த இரண்டு தேர்தல்களிலும் – 1980, 1984 – காங்கிரசுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஜனதா கட்சியும் தெலுகு தேசம் கட்சியும் முறையே 43 மற்றும் 30 எம்.பி.க்களை மட்டுமே பெற்றிருந்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை. இன்று காங்கிரஸ் முன்வைக்கும் இதே வாதத்தை அன்று தெலுகு தேசம் உரக்க சொல்லியும் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை.

அட்டர்னி ஜெனரல் என்பவர் அரசின் முதன்மை சட்ட ஆலோசகர். அரசு காதுக்கு இனிக்கும் ஆலோசனையைதான் அட்டர்னி ஜெனரல் வழங்குவார். ஆனால் நாடாளுமன்றம் என்பது சுய அதிகாரம் கொண்ட அமைப்பு. அதன் தலைவரான சபாநாயகர் ஒரு அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை ஏற்றாக வேண்டும் என்பது இல்லை. மரபுகளையும் முன்மாதிரிகளையும் நாட்டின் அரசியல், நிர்வாக சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், கட்சி சார்பு இல்லாத சில சட்ட நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.

மரபும் முன்மாதிரியும் பார்த்தால் காங்கிரஸ் கனவு நனவாக சான்ஸ் இல்லை. அரசியல், நிர்வாக சூழ்நிலை என்பது கொஞ்சம் அர்த்தம் உள்ளது. எப்படி என்றால், நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு யாரை நியமனம் செய்வது என்பதில் எதிர்க்கட்சி தலைவருக்கும் சட்ட ரீதியாக பங்கு இருக்கிறது. மனித உரிமைகள் கமிஷன், லோக்பால், சி.பி.ஐ டைரக்டர், தகவல் உரிமை ஆணையர், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷனர் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதை பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்ய வேண்டும். கடைசியாக குறிப்பிட்ட சிவிசி பதவிக்கு மட்டுமே ”மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக யாரும் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில், அந்த சபையில் அதிக பலம் கொண்ட எதிர்க்கட்சி எதுவோ அதன் தலைவர் குழுவில் இடம் பெறலாம்” என்று ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஏனைய முக்கிய பொறுப்புகளுக்கு ”அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்” ஒப்புதலுடன் ஆட்களை நியமிக்கதான் வழி உள்ளது. ஏஜியின் ஆலோசனையை ஏற்று அப்பதவி காங்கிரசுக்கு கிடையாது என சபாநாயகர் முடிவு எடுத்தால் மேற்படி நியமனங்களின் கதி என்ன ஆகும் என்பது கேள்விக்குறி.

இந்திய தலைமை நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையர் ஆகியவை போலவே இந்த பதவிகளும் மிகவும் முக்கியமானவை. நாடு சரியான திசையில் செலுத்தப்படுகிறதா என்பதை நிர்ணயிப்பது இந்த பதவிகளை வகிப்பவர்களின் செயல்பாடுகள். அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் அமர்பவர் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் ஆலோசித்து விவாதித்து உடன்படும் போதுதான் மக்களுக்கு அந்த நம்பிக்கை உண்டாகும். இந்த நியமனங்கள் ஒருதரப்பாக அரசின் அதிகாரத்தில் மட்டும் விடப்பட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அது ஜனநாயகத்துக்கு விழும் அடிமட்டுமல்ல; கடிகாரத்தின் முட்களை பின்னோக்கி சுழற்றுவதற்கு ஒப்பாகும்.

பதவி கேட்டு காங்கிரஸ் அடம் பிடிப்பது அக்கட்சிக்கும் அதன் தலைமைக்கு பெருமை சேர்க்கவில்லை என்பது நிஜம். அதே சமயம், 55 எம்.பி.க்கள் இல்லை என்ற காரணத்தை சாக்கிட்டு பிஜேபி அரசு தனது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்த முனைவதும் அக்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் நிச்சயமாக அழகல்ல.

பி.கு

தேர்தல் நடத்தலாமே?

’ஐ.மு.கூ சார்பில் கேட்கிறோம், பதவி தாருங்கள்’ என்று காங்கிரஸ் கெஞ்சும்போது அதன் தோழமைக் கட்சிகள்கூட ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. காங்கிரஸ் வெளிநடப்பு செய்யும்போது தோழர்கள் எழுந்து பின்தொடராமல் மேலே சுழலும் மின்விசிறியை அண்ணாந்து பார்க்கிறார்கள். காங்கிரஸ் தவிரவும் மக்களவையில் 34 எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமாக 212 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவித்து நடத்தலாம். இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக (37), அடுத்துள்ள திருணாமுல் காங்கிரஸ் (34) போன்ற கட்சிகளுக்கும் சான்ஸ் கிடைக்கும். அப்படி தேர்ந்து எடுக்கப்படுபவர் உண்மையான எ.க.த என்பதை எவரும் ஆட்சேபிக்க முடியாது.

(இழு தள்ளு 46/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 03.08.2014)

Related Posts