இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சித்த ஃபேஸ்புக்-க்கு ஆப்படித்த டிராய்!

இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சித்த ஃபேஸ்புக்-க்கு ஆப்படித்த டிராய்!

இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தடை விதித்துள்ளது. இதன் மூலம் சமநிலை இணையதளச் சேவை பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சி எடுத்த முகநூல் (ஃபேஸ்புக்) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளது. டிராயின் இந்த அறிவிப்பு மூலம் நீண்டகாலமாக விவாதப்பொருளாக இருந்த சமநிலை இணையதளச் சேவை விஷயத்துக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேலும் “ஃபிரீ பேசிக்ஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் இலவசமாக இணையதளச் சேவை வழங்குவதாக அறிவித்த முகநூல் நிறுவனத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதலில் சில வலைதளங்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு, பிறகு முக்கிய வலைத்தளங்களுக்குச் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் சமநிலை இணையதளச் சேவை பாதிக்கப்படும் என்பது முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தது.
trai
இதனிடையே இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களைத் தடுக்கும் விதிகள் 2016-ஐ தில்லியில் திங்கள்கிழமை, டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா வெளியிட்டார். அப்போது அவர், “இணையதளச் சேவை வழங்கும் எந்த ஒரு நிறுவனம், தங்கள் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிக்க முடியாது. இதனை எந்த நிறுவனமாவது மீறினால், நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதி மீறப்பட்டால் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இணையதளத்தில் எந்த வலைதளத்தைப் பயன்படுத்தவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்பதில் டிராய் உறுதியாக உள்ளது.

புதிய விதிமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வந்துவிட்டது. நெருக்கடி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் இணையதளச் சேவையை அளிக்கலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. நெருக்கடி காலம் எது என்பதை டிராய் வரையறை செய்யவில்லை. எனினும் குறைந்த கட்டணத்தில் இணையதளச் சேவை வழங்குவது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 7 நாள்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே ஏற்கெனவே நெட் நியுட்ராலிட்டி வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா முழுவதும் வலியுறுத்தி வந்தனர். தற்போது ட்ராய் அறிவிப்பு இதனை சாத்தியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் ஒருவர் மாதம் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இன்னொருவர் 10 MB டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால் இணைய வேகம், கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர அடிப்படை கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்பதுதான்.

ஆனால் ஃபேஸ்புக்கின் ப்ரீ பேசிக்ஸ், ஏர்டெல் ஜீரோ ஆகிய திட்டங்கள் இந்த கருத்துக்கு முரண்பாடானவை. இவை ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டுமே இலவசமாக வழங்க முடியும் என்று கூறி வருகின்றன. இதனால் மற்ற சேவைகள் பாதிக்கப்படவும, மக்கள் கூடுதல் கட்டணம் அளித்து இணையத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்கும் என்ற பயம் அனைவருக்கும் உள்ளது.
வெறுப்பான மார்க் சக்கர்பெர்க் போட்ட ஸ்டேட்டஸ்:

இந்த அறிவிப்பையடுத்து அதிருப்தியடைந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ” இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிருப்தியளிக்கிறது, மக்களை இணையத்தின் மூலம் இணைப்பதே எங்கள் நோக்கம். ட்ராயின் முடிவு இதற்கு தடையாக இருக்கும். இந்தியாவின் கிராமங்களை இணைக்கும் எங்கள் செயலுக்கு இது போன்ற விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கும். உலகில் 38 நாடுகளில் 19 மில்லியன் மக்களை இணைப்பில் வைக்க உதவியுள்ளோம். இந்தியாவையும் இதில் இணைக்கவே இந்த முயற்சியை நாங்கள் செய்தோம்” என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.

Related Posts