ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்காதீங்க- உணவு மற்றும் மருந்து கழகம் வேண்டுகோள்
இந்தியாவில் 7.25 லட்சம் மருந்துக்கடைகள் இருக்கின்றன. 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. மருந்து வணிகம் மிகவும் கட்டுக்கோப்பானது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு நீண்ட வரலாறை மருந்தகங்கள் பராமரிக்கின்றன. குறிப்பிட்ட நாளில் விற்ற ஒரு மாத்திரையில் பிரச்னை இருப்பதாகக் கருதினால் அதைத் தயாரித்த கம்பெனி தயாரித்து பேக் செய்யப்பட்ட நாள் அதன் டிஸ்ட்ரிபியூட்டர், மருந்தகத்திற்கு வந்த நாள் விற்ற நாள் வாங்கிய நபர் உள்பட அத்தனை தகவல்களையும் சில நிமிடங்களில் எடுத்து விடலாம்.

மருந்தில் பல வகைகள் உண்டு. ‘ஓவர் த கவுன்ட்டர்’ பிரிவில் வரும் மருந்துகளை பெட்டிக் கடை களில் கூட வைத்து விற்கிறார்கள். சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே தர வேண்டும். சைக்கியாட்ரிக் நோய்களுக்கான மாத்திரைகளில் போதை தரக்கூடிய சில ரசாயனங்கள் உண்டு. மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே அந்த மாத்திரைகளை விற்க வேண்டும். தவறாகக் கொடுத்து விட்டாலோ, காலாவதியான மாத்திரைகளைத் தந்து விட்டாலோ பல விளைவுகள் ஏற்படும்.
இவ்வளவு பொறுப்புகள் நிறைந்த மருந்து விற்பனையை ஆன்லைனில் சட்டவிரோதமாக செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன.ஆனால் ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் இதுகுறித்து உணவு மற்றும் மருந்து கழக (எப்.டி.ஏ.) அதிகாரி பி.ஆர். மாசல், “ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. எனவே பொது மக்கள் ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்”இவ்வாறு அவர் கூறினார்.


